மலையக 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும்

இரா,சாணக்கியன் MP போர்க் கொடி

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.

சிறுவர்களை பணிக்கமர்த்தும் முகவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.கடந்த 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்,

இதேபோன்று நாட்டில் எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுடீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

எனினும், எங்களுக்கு தெரியாமல் எங்கெங்கோ எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தினம் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது. அத்துடன், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுவதாக தினமும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவரினாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன், அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுகின்றனர். எனவே முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

 


Add new comment

Or log in with...