6 கொலைகளுடன் தொடர்பு; தப்பிக்க முயன்ற நபர் STF சூட்டில் பலி

6 கொலைகளுடன் தொடர்பு; தப்பிக்க முயன்ற நபர் STF சூட்டில் பலி-Ganster Shot Dead in a Special Operation by STF at Baseline Road-Seeduwa

- பேஸ்லைன் வீதியில் நள்ளிரவில் சம்பவம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு (STF) கிடைத்த தகவலொன்றை அடுத்து, சீதுவை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை பின்தொடர்ந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று (17) நள்ளிரவு வேளையில் பேஸ்லைன வீதியில் வைத்து குறித்த வாகனத்தை சோதனையிட முயற்சி செய்த போது, STF இனால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்தில் பயணித்த சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் லலித் வசந்த பிந்து எனும், சீதுவையைச் சேர்ந்த 44 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபர், 1991 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சீதுவை, வத்தளை, மாத்தறை, அக்குரெஸ்ஸ, கட்டுநாயக்க, ராகமை உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் 6 கொலைகள், பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான சந்தேகநபர் என, அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...