துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களது சிறப்புகள்

துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களது சிறப்புகள்-Dhul Hajj 10 Days in Islam

அல்லாஹு தஆலா தம் அடியார்கள் தமது அருள்களையும், மன்னிப்புக்களையும் நெருக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களையும், பல நேரங்களையும், காலங்களையும், நாட்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அந்த வகையில் பனிரெண்டு மாதங்களை விதியாக்கி அவைகளில் நான்கு மாங்களை கண்ணியப்படுத்தியுள்ளான். அதில் துல் ஹஜ் மாதமும் ஒன்றாகும.;; அம்மாதத்தின்; முதல் பத்து நாட்களையும் அவன் விஷேடமாகச் சிறப்பாக்கியுள்ளான்.

இது தொடர்பில் அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

விடியக்காலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக' (அல் குர்ஆன் 89:1-2)

இவ்வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஏனைய சன்மார்க்க அறிஞர்களும், இங்கு குறிப்பிடப்படும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
'வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல் ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலை விடச் சிறந்ததல்ல' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், 'அறப்போரை விடவுமா?' என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அறப்போரை விடவும் தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர' என்றாhர்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி)

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்பட வேண்டிய நல்லமல்கள்
துல் ஹஜ்ஜின் ஆரம்ப ஒன்பது நாட்கள் நோன்பு நோற்றல்
நபி (ஸல்) அவர்கள் துல் ஹஜ் மாதம் (முதல்) ஒன்பது நாட்களும், ஆஷுராவுடைய தினத்திலும், அய்யாமுபீழுடைய மூன்று தினங்களிலும், மாதத்தின் முதல் திங்கள், வியாழன் தினங்களிலும் நோன்பு நோற்க கூடியவர்களாக இருந்தார்கள் என ஹுனைதா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: ஸுனனு அபீதாவூத்)

அரபா நோன்பு நோற்றல்.
துல் ஹஜ் மாதத்தின் பிறை ஒன்பதாவது தினம் அறபா தினமாகும். அத்தினத்தில் நோன்பு நோற்பது விசேட ஸுன்னத்தாகும்.

அபூ கதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அரபா தின நோன்பு பற்றி நபியவர்களிடம் வினவப்பட்ட போது, சென்ற வருடத்திற்கும் தற்போதைய வருடத்திற்கும் (அவற்றில் செய்யப்பட்ட சிறுபாவங்;களுக்கு) குற்றப்பரிகாரமாக அது அமையும் என கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

தக்பீர், தஸ்பீஹ், தஹ்லீல் கூறல்.
இப்னு உமர், அபூ ஹுறைரா றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் (துல் ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் சந்தை பகுதிகளுக்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள். (ஆதாரம்: புஹாரி)

துல் ஹஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் மேற்கோள்ளப்படும் அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதும் மகத்தானதும் வேறெதும் இல்லை. எனவே, அந்நாட்களில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் என்பவற்றை அதிமாகக் கூறுங்கள் என நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)

உழ்ஹிய்யாஹ் நிறைவேற்றல்.
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் 'உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.' (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.

அதன் சிறப்பை பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
பெருநாள் தினத்தன்று மனிதன் செய்யும் நல்லமல்களில் இரத்தம் ஓட்டி குர்பான் கொடுப்பதை விட அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல் வேறேதுமில்லை.

மேலும் அப்பிராணி அதன் கொம்புகளுடனும், முடிகளுடனும், குழம்புகளுடனும் நாளை மறுமைநாளில் வரும். அறுக்கப்படும் மிருகத்தின் இரத்தம் பூமியில் விழு முன்னரே அது அல்லாஹ்விடம் சென்றடைந்து விடுகின்றது. எனவே மன விருப்பத்தோடு நிறைவேற்றுங்கள்' என நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா)

உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர்; பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள்
உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல் ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும்; தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

ஏழு நபர்கள் இணைந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஒட்டகத்தையோ உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவதை விட, தனித்தனியாக ஒவ்வொருவரும், ஓர் ஆட்டினை உழ்ஹிய்யா கொடுப்பது ஏற்றமானதாகும். இச்சிறப்பினை அடைந்துகொள்ள ஒவ்வொருவரும் தனது சக்திக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.

இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வதுடன், எமது நாட்டில் நடைமுறையிலுள்ள விலங்குச் சட்டம் கூறும் விடயங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனவே இந்நாட்களில் நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்ள திட உறுதி பூணுவதுடன் அந்த நல்லமல்களை கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களைப் பேணியபடி அமைத்துக் கொள்ளவும் தவறக்கூடாது. அத்தோடு எமது நாட்டிலும் முழு உலகத்திலும் இத்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ் நிலை நீங்கி இயல்பு நிலை திரும்பவும் முஸ்லிம் சமுகத்திற்காகவும், உலக அமைதிக்காகவும், வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

ஏ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி (காஷிபி)


Add new comment

Or log in with...