பொம்மைக்குள் பரிசுப் பொருள் போன்று போதைப்பொருள் கடத்தல்

பொம்மைக்குள் பரிசுப் பொருள் போன்று போதைப்பொருள் கடத்தல்-Kudu Noni Arrested-Heroin Smuggling Through Courier Service

- அனுப்பிய 'குடு நோனி', கோரிய அநுராதபுரம் நபர் கைது

பொம்மை ஒன்றை பரிசாக அனுப்பும் வகையில், போதைப்பொருளை அனுப்பிய பெண் ஒருவரும் அதனை பெற்றுக் கொண்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

பொருட்கள் விநியோகிக்கும் (Courier) சேவை நிறுவனம் மூலம் அநுராதபுரம் முகவரிக்கு அனுப்பப்படவுள்ள பொதியொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, கடந்த 3 நாட்களுக்கு முன் கொழும்பு போதைத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பொருட்கள் விநியோக சேவை நிலையத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பொம்மை ஒன்றினுள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பொதியில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அநுராதபுரம் நபரின் முகவரிக்குச் சென்று, அனுப்பி வைத்த நபர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், கொம்பனித் தெருவைச் சேர்ந்த 49 வயதான 'குடு நோனி' என அழைக்கப்படும் பெண் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த பெண் இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட நபர் என அடையாளம் காணப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் கடுவல பிரதேசத்திலுள்ள வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 56 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பொதியை அனுப்பிய பெண்ணும், அதனை கொள்வனவு செய்ய முயற்சி செய்த அநுராதபுரத்தைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கடுவல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விடயம் தொடர்பில் கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...