மேலதிக பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்: வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழு பணிப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் காணப்படும் மேலதிக பதவிகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கோப் குழு பணிப்பு.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் 2021ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி 688 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றை விரைவில் பூர்த்திசெய்வதற்கு முகாமைத்துவத் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் கடந்த வியாழக்கிழமை அதிகாரசபைக்குப் பணிப்புரை விடுத்தார்.

நிறுவனத்தின் உயர் நிர்வாக மட்டத்தில் 154 வெற்றிடங்கள் காணப்படுவது தொடர்பிலும், 46 மேலதிக பதவிகள் குறித்தும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். மூன்றாம் நிலை மட்டத்தில் 116 வெற்றிடங்களும் 218 மேலதிக பதவிகளும் காணப்படுவது எவ்வாறு எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

நிறுவனமென்றில் நிலவக்கூடாத நிலைமையொன்றே இங்கு காணப்படுவதாகவும், இது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து ஒரு மாதகாலத்துக்குள் குழு முன்னிலையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அபேவர்த்தனவுக்கு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் வலியுறுத்தினார்.

2017 – -2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 3,700 பயிலுனர் அலுவலகர்களுக்கு 583 மில்லியன் ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளமை கோப் குழுவில் புலப்பட்டது.

இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த கேள்வியெழுப்பியதுடன், இவர்களுக்கு முறையாகக் கடமைகள் வழங்கப்படவில்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை உரிய முறையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தொடர்பிலும் இக்குழு விசேட கவனம் செலுத்தியது. அத்துடன், நிறுவனத்தின் செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய வருடாந்த கொள்முதல் திட்டம், மனிதவள அபிவிருத்தித் திட்டம் மற்றும் உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் என்பவை உள்ளடக்கப்படாமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. பத்து இலட்சம் ஜனசெவன வீட்டுத் திட்டம் தொடர்பான தர அறிக்கையை ஒரு மாதகாலத்துக்குள் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும் இதற்கு முன்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குப் பணித்திருந்தபோதும் இதனை சமர்ப்பிக்காமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. 1,351 வீட்டுத்திட்டங்களுக்கான பொதுச் பொதுச் சொத்துக்கள் இன்னமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாற்றப்படாமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என குழுவின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஒரு ஏக்கர் 26.5 பேர்ச் காணியை வீடுகள் அமைத்து அபிவிருத்தி செய்வதற்காக 2006ஆம் ஆண்டு தனியார் துறையுடன் ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளது.

இக் காணி 2016 ஆம் ஆண்டு எவ்வித முன்னேற்றமும் செய்யப்படாது 2006ஆம் ஆண்டு ஒப்பந்த விலையான 812 மில்லியன் ரூபா பெறுமதிக்கே வழங்கப்பட்டமையும் குறித்தும் இங்கு புலப்பட்டது. இந்தக் காணியை மீட்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை பின்பற்றப்படும் என்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, கோப் குழுவிடம் சுட்டிக்காட்டியது.

2020 வருட நிதிநிலை அறிக்கையின் படி அதிகார சபையின் செவன ஊடகப் பிரிவுக்குக் கிடைக்க வேண்டிய தொகை 68 மில்லியன் ரூபா என்பதும் இங்கு புலப்பட்டதுடன், இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அதிகாரசபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், இதில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டி.வி.சானக, இந்திக அனுருத்த ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ண, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, ஜகத் புஷ்பகுமார, பிரேம்நாத்.சி.தொலவத்த, எஸ்.இராசமாணிக்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...