மட்டக்குளியவில் சம்பவம்
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் மட்டக்குளி பகுதியில் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மட்டக்குளி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே போதைப் பொருளுடன் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ மற்றும் எழுபத்தியொரு கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் அவர் வைத்திருந்த 2 லட்சத்து 89 ஆயிரம் பணத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை விலை ஒரு கோடிக்கும் அதிகமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இரத்மலானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது போதைப் பொருளுடன் இருபத்தைந்து வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கிராண்ட்பாஸ் பொலிசாரினால் தொட்டலங்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு தொகை போதைப் பொருளுடன் 56 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருளின் சந்தை பெறுமதி ஒரு கோடி 20 இலட்சம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment