இம்ரான் அரசுக்கு எதிராக பலூச்சி மீனவர்கள் போராட்டம்

பலூச்சிஸ்தான் குவாதார் கடற் பிரதேச மீனவர்கள் சீன இழுவைப் படகுகளுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை பாகிஸ்தான் அரசு வழங்கக்கூடாது எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலூச்சி மாணவர் அமைப்பும் தேசிய கட்சியும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் குவாதார் ஊடகவியலாளர் பணிமனை முன்பாக நடைபெற்றது.

சீன இழுவைப் படகுகளுக்கு இம்ரான் அரசு அனுமதி வழங்கினால் அது தமது வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தே இப்போராட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே சிந்தி மீனவர்கள் தமது பகுதியில் மீன் பிடித்து வருவதாகவும் தற்போது வெளிநாட்டு மீனவர்களுக்கும் அனுமதி வழங்கினால் தாம் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

குவாதார் மீனவர்கள் தமது இடங்களை விட்டு வெளியேறி வசதியான மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுவதற்கு வழிவிட்டனர். ஆனால் தற்போது சீனப் படகுகள் அங்கே வரவுள்ளது தமக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழிப் பாதைத் திட்டத்தின் கீழ், சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை பாகிஸ்தானில் முதலீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் பலூச்சிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. பலூச்சிஸ்தானில் அமைந்துள்ள குவாதார் துறைமுகம் சீனாவின் மேற்கு ஸின் ஜியாங் பிராந்தியத்தை இணைக்கக்கூடியது.

மத்திய கிழக்கில் இருந்து வரக்கூடிய எண்ணெய் குழாய்கள் இவ்வழியாக சீனாவை சென்றடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...