இணையத்தளம் ஊடாக மதுபான விற்பனை கோரிக்கை நிராகரிப்பு (UPDATE)

ஒன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கான கோரிக்கையை, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயலணி நிராகரித்துள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தள்ளார்.


மதுவரி திணைக்கள கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி

ஒன்லைன் மூலமாக மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான அனுமதியைநேற்று நிதியமைச்சு கொள்கை ரீதியாக வழங்கியுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்தார்.

பயணத்தடை காரணமாக நாடளாவிய அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் சுப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து ஒன்லைன் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்வோர் அந்த முறைமையின் கீழ் மதுபானங்களையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அந்த தீர்மானத்தை கொரோனா வைரஸ் தடுப்புக்கான மத்திய நிலையத்தின் அனுமதிக்காக விடுவதாகவும் அந்த அனுமதி கிடைத்தால் மாத்திரமே ஒன்லைன் மூலமான மதுபான வர்த்தகத்திற்கு கலால் திணைக்களம் அனுமதி வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் 600 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலங்களில் நாடளாவிய ரீதியில் சட்டவிரோத மதுபான விற்பனை இக்காலங்களில் அதிகரித்து வருகின்றது.

அதனைக் கட்டுப்படுத்தும் ஒரு உபாயமாகவே ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கான அனுமதியை வழங்க தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் சில வர்த்தக நிறுவனங்கள் ஒன்லைன் மூலம் மதுபான விற்பனையை மேற்கொள்வதற்கான அனுமதியை கலால் வரி திணைக்களத்திடம் கோரியிருந்தன.

அதனை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...