க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த தகைமை பெறுவதே மாணவர்களின் முதன்மை இலக்காக அமைய வேண்டும்!

இலங்கையில் பாடசாலைக் கல்வியின் பின்னர் மாணவர்கள் தமது க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்ற அதேவேளை, உயர்கல்வியைத் தொடராத மாணவர்கள் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) தகைமைகளுடன் சில அரசாங்க தொழில்களுக்கு விண்ணப்பிக்கக் கூடிய நிலைமையும் காணப்படுகின்றது.

எனினும் உயர் கல்வியும், அரசாங்கத் தொழிலும் போட்டி நிறைந்ததாகக் காணப்படுவதனால், இவை எல்லா மாணவர்களுக்கும் கிடைக்கப் பெறுவதிலும் சிக்கலான நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு உயர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், அதிக மாணவர்கள் இவ்வாய்ப்புகளை தமது அறியாமையினால் இழந்து விடும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

பொதுவாக க.பொ.த சாதாரண தரத்தில் மாணவர்கள் சித்தியடைய வேண்டிய குறைந்த தகைமையாக தாய்மொழி மற்றும் கணிதம் உள்ளடங்கலாக 3 திறமைச் சித்தியும், 3 சாதாரண சித்தியுமாக (3c, 3s) மொத்தமாக ஆறு பாடங்கள் சித்தியடைந்திருத்தல் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்க போதுமானதாகும்.

எனினும் பல பாடசாலைகளில் இத்தகைமையை மிகக் குறைந்த இலக்காகக் கொண்டு மாணவர்கள் வழிகாட்டப்படுவதனால், பல மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் கல்வி மற்றும் அரச தொழில் வாய்ப்புகளை இழக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.

சில பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரத்தில் போதுமான சித்தி பெறாமலேயே க.பொ.த (உ/த) பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றி சித்தியடைந்தும் உள்ளனர். இவை பெரும்பாலும் தனியார் பாடசாலை மற்றும் மதரஸாக்களிலும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலை 2020 ஆம் ஆண்டு (உ/த) பரீட்சையிலும் இடம்பெற்றுள்ளது. சாதாரண தரத்தில் போதுமான சித்தியைப் பெறாமல் உயர் தரத்தில் கற்க முடியாது. எனவே இவ்வாறான மாணவர்கள் உயர் தரத்தில் சிறப்பாக சித்தியடைந்திருப்பினும், சாதாரண தரத்தில் சித்தியடையாமல் உயர் தரத்திற்கு தோற்றியுள்ளமையால் இம்மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படாதிருக்க அனைத்து அதிபர், ஆசிரியர்களும் தெளிவு பெறுவதோடு மாணவர்களையும் வலுப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். எனினும் அம்மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் காட்டும் திறமைகளுக்கேற்ப மேற்கூறிய கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக இன்னும் சில கற்கை நெறிகளுக்கும் விண்ணப்பிக்கும் தகைமையைப் பெறுவர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், குறைந்த Z புள்ளி அல்லது மறை Z புள்ளி (MINUS Z SCORE) பெற்ற மாணவர்கள் கூட அவர்களது க.பொ.த (சா/த) பெறுபேற்றின் காரணமாக மேலதிகமான கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்து பல்கலைக்கழகம் செல்லக் கூடிய சிறப்பான சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறே பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படும் உளச்சார்பு பரீட்சையில் சித்தியடைவதன் மூலமும் இவ்வாறான மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பை தனதாக்கிக் கொள்ள முடியும்.

மேலும் பாடசாலைக் கல்வியின் பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சுயமாக விண்ணப்பிக்க வேண்டிய நிலைமை காணப்படுவதனால் பல்கலைக்கழக விண்ணப்ப நடைமுறைகள் தெரியாத சில மாணவர்கள் சிறந்த பெறுபேறு பெற்ற போதிலும், பொருத்தமான பல்கலைக்கழகம் மற்றும் கற்கை நெறியை இழக்கவும் நேரிடுகின்றது. சில வேளைகளில் பல்கலைக்கழக வாய்ப்பையே இழக்க நேரிடுகின்றது.

அதேபோல் தொழில்துறையை நோக்குவோமாயின், பட்டத் தகைமையுடைய பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்ற அதேவேளை க.பொ.த (உ/த) சித்தியை தகைமையாகக் கொண்டவர்களுக்குமான தொழில்களும் காணப்படுகின்றன. இவ்விரு தரப்பினருக்குமான தொழில்களில் பெரும்பாலானவற்றிற்கு க.பொ.த (சா/த) பெறுபேறு அவசியமாகின்றது. அதாவது இத்தொழில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை க.பொ.த சாதாரண தரத்தில் தாய்மொழி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கட்டாயம் திறமைச் சித்தி (C) பெற்றிருத்தல் வேண்டும் எனும் நிபந்தனை காணப்படுகின்றது. இங்கு க.பொ.த (சா/த) பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதப் பாடங்களில் திறமைச் சித்தி (C) பெறாத பல உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களும், பல பட்டதாரிகளும் கூட தொழிலுக்காக விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

இவ்வாறு க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெறல், பல்கலைக்கழக அனுமதி பெறல் மற்றும் தொழில் பெறல் போன்ற மூன்று சந்தர்ப்பங்களிலும் க.பொ.த (சா/த) பெறுபேற்றின் மிகக் குறைந்த தகைமையானது வேறுபட்ட விதத்தில் மூன்று வகைகளில் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவேதான் பாடசாலைகளில் க.பொ.த (சா/த) சித்தியை க.பொ.த (உ/த) தகைமையோடு மட்டும் மட்டுப்படுத்தி விடாமல் மாணவர்கள் எதிர்கால உயர்கல்வி மற்றும் தொழில் துறைகளில் இணையக் கூடிய தகுதியைப் பெறும் வகையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைவதனையே மிகக் குறைந்த இலக்காகக் கொள்ள வேண்டும். இதற்காக மாணவர்கள் வழிகாட்டப்படல் வேண்டும்.

ஆகவே, பல்கலைக்கழக அனுமதி, உயர்கல்வி வாய்ப்புகள், மற்றும் தொழில்துறைக்கான குறைந்த தகைமைகள் போன்றவை தொடர்பாக மாணவர்கள் அறிவூட்டப்படல் வேண்டும். அவ்வறிவூட்டல் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு முன்னரே வழங்கப்படல் வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் உரிய காலத்திலிருந்தே தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக பாடசாலை மட்டத்திலேயே அதிபர், ஆசிரியர்கள் தேவையான வழிகாட்டல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல்கலைக்கழக அனுமதி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதில் சாதகமான சந்தர்ப்பங்களை மாணவர்களுக்கு அதிகரிக்க முடிவதோடு இவை தொடர்பாக அதிபர், ஆசரியர்கள் மற்றும் தொழில் வழிகாட்டுனர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் தெளிவு பெற்றிருப்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

யு.ஸாதிக் அர்ஷத்
(ஆசிரியர்) கமு/ கமு/ இராமகிருஷ்ண
ம.வித்தியாலயம், கல்முனை


Add new comment

Or log in with...