பஸ் கட்டணத்தை உயர்த்த இதுவரை எந்த தீர்மானமும் இல்லை

பஸ் கட்டணத்தை உயர்த்த இதுவரை எந்த தீர்மானமும் இல்லை-Bus Fare Will Not Increase-Dilum Amunugama

எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப  பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து  மற்றும் சமூக பொலிஸ் சேவைகள்  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில்  இடம்பெற்ற (12) ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது-

பயணக்கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக  அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

கொவிட் அச்சுறுத்தல் காணப்படும் இந்நேரத்தில் மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்த முடியாது. அத்தகையை நேரத்தில்  பஸ் உரிமையாளர்கள் பாதிப்பு ஏற்படாத அதே நேரம் பொதுமக்களும் பாதிப்படையாத வகையில் முடிவு எடுக்கப்பட வேண்டும்.

ஜப்பானில் இருந்து பெறப்பட்ட கடனைப் பயன்படுத்தி  அமைச்சகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தவறாகக் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரி செலுத்தாது எந்த ஒரு நாட்டிலிருந்தும் எத்தகைய ஒரு வாகனத்தையும்  இறக்குமதி செய்ய முன்னைய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனை தடை செய்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

அவர்களுக்கு சாதகமான  அரசியல் நிலையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் வெ்வாறு பல்வேறு தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

(எம்.ஏ. அமீனுல்லா)


Add new comment

Or log in with...