கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆலோசனைகள்

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசித்தவரான நகர அபிவிருத்தி சபை உதவிப்பணிப்பாளர் லங்கா பிரியதர்ஷினி.

இம்முறை சிங்கள புதுவருட பண்டிகையை வழமையை விட மிக சந்தோஷமாக கொண்டாடினார். அதற்குக் காரணம் திருமணமாகி சில வருடங்களாக அவருக்கு
குழந்தைகள் இல்லை.

இம்முறை புதுவருடத்தில் அவர் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தார். அவரது கணவர் மகேஷ் தர்ம பிரிய. அவர்கள் நீண்ட காலமாக வைத்திய சிகிச்சை பெற்று வந்தனர். இறுதியிலே பரிசோதனைக் குழாய் கருக்கட்டல் மூலம்  குழந்தையை பெறும் பாக்கியத்தைப் பெற்றிருந்தனர்.   அந்தப் பெண் தனது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அவதானமாக இருந்தார்.

ஆனால் சிங்கள- தமிழ் புதுவருட முடிவின் பின்னர் ஏப்ரல் 16ஆம் திகதி  சளி உபாதை காரணமாக  வைத்தியரை சந்திக்கச் சென்றார். அங்கு சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாததால் 21 ஆம் திகதி மாத்தறை தனியார் வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர் ஒருவரை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோக்கில் சந்திக்கச் சென்றார.

அங்கு அவருக்கு ரெபிட் ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதன் மூலம் அவருக்கு   கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் அவரது கணவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதன் பின்னர் ப்ரியதர்ஷினி கும்புறு கமுவ   வைத்தியசாலையிலும், மகேஷ் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்கள். மகேஷின் தாயாரும் covid-19 தோற்றால் .பாதிப்புக்குள்ளாகி இருந்தார்.

கும்புறுகமுவ  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 46 வயதான பிரியதர்ஷினியின்  உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்  இடமில்லாததால்  கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் கரு  கலைந்தது.  அவரின் உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகி அவர்  9ஆம் திகதி  மரணம் அடைந்தார். அவர் இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இரண்டாவது கர்ப்பிணிப் பெண் ஆவார்.

Covid-19 வைத்திய விஞ்ஞானத்திற்கு புதிய நோயாகும். ஒரு வருடத்துக்கு முன்னர் கர்ப்பிணிகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் பாதிப்பில்லை  என்றும்   மற்றவர்களைப் போன்றே காணப்படும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.  covid-19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவதானத்துக்கு உரியவர்கள் என்ற பட்டியலில் கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவார்கள்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு covid-19  தொற்று  சிக்கல் அதிகமாக இருக்கும் என இன்னும் ஆய்வு மூலம் கண்டறியப்படவில்லை. ஆனால் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.  இலங்கையில் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்று சுகமாகவும் இருக்கின்றார்கள் . அக்குழந்தைகளுக்கு Covid-19  தொற்று உண்டா என தற்போது கூற முடியாது. பரிசோதனையின் பின்னரே கூற முடியும்.

“Covid-19 ஆல் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் சிக்கலை எதிர்நோக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன.  ஒன்று  தாயார் வயது  கூடியவராக காணப்படல்.  மற்றைய விடயம் அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் காணப்படுகின்றமை. அதிக உடல் நிறையும் சிக்கலுக்குக் காரணமாகின்றது. அவ்வாறான கர்ப்பிணிப் பெண்களை நாம் அவதானத்துக்கு   உரியவர்கள்  என அடையாளம் கண்டுள்ளோம். அவர்களை நாம் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கிறோம்” என விபரிக்கின்றார் கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பிரசவ மற்றும் பெண் நோயியல் விசேட வைத்திய நிபுணர் இந்து அசங்க ஜெயவர்தன. 

தற்போது  ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலையில் covid-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 20 கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை  பெற்று வருகிறார். திஸ்ஸமஹாராம  தெபரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த  கர்ப்பிணிப் பெண்ணொருவர் தொற்றுக்கு உள்ளாகி  மாலபே  நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது குடும்பத்தில் நான்கு பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சில வேளைகளில் குறைப் பிரசவம் நிகழலாம். சில சந்தர்ப்பங்களில் ‘சிசேரியன சிகிச்சை மூலம் குழந்தையை  பிரசவிக்க வேண்டி நேரிடலாம். 

இவ்வாறான நிலையைத் தவிர்க்க வேண்டுமென்றால் முடிந்த வரை கர்ப்பிணிப் பெண்கள் Covid-19 தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களை தொற்றிலிருந்து பாதுகாக்க இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டுமென பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இந்து அசங்க ஜயவர்தன குறிப்பிட்டார். அவற்றில் ஒன்று முடிந்தளவு கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும. அதன் மூலம் அவர்கள் சமூகத்திலிருந்து தொற்று ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.  வீட்டில் உள்ள அனைவரும் சுகாதார நடைமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் நோய்த் தொற்றுக்கு  ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரச சேவையிலுள்ள கர்ப்பிணிப் பெண்களை சேவைக்கு  அழைக்காமல் அவர்களுக்கு சம்பளத்துடனான விடுமுறையை  அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அது தொடர்பான சுற்றுநிருபம் கடந்த 10ஆம் திகதி அரச  நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  தனியார் நிறுவன தலைவர்களிடமும் கர்ப்பிணிப் பெண்களை பணிக்கு அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் நிபுணரான  விசேட வைத்திய நிபுணரான அவர்  குறிப்பிட்ட இரண்டாவது முறை தடுப்பூசி பெற்றுக் கொள்வதாகும்.

‘தடுப்பூசி பெற்றுக் கொள்வதால்  கர்ப்பிணிப் பெண்களின் கருவுக்கு பாதிப்பு ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுகாதார நிறுவனங்கள் பலவும் தெரிவித்துள்ளன.குழந்தைப் பேறுக்காக சிகிச்சை பெற்று  வருபவர்களும் தடுப்பூசி பெற்றுக் கொள்ள தயங்கத் தேவையில்லை. அதன் மூலம் கருவுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர் ஏற்படும்  காய்ச்சலை தடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சில வேளைகளில் காய்ச்சல் காரணமாக கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்படலாம்.  அதற்காக கர்ப்பிணிப் பெண்கள் பரசிட்டமோல் மாத்திரையை பாவிக்கலாம்’ என அவர் விவரித்தார்.

ஆனால் இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவியான நரம்பியல் நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பு ஊசியை  வழங்கும் போது விஷேட கவனம் செலுத்தி முடிவுகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

‘கர்ப்பிணிப் பெண்கள் என்பது இரண்டு உயிர்கள். அதனால் அவர்கள் குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். உலகில் எங்குமே கர்ப்பிணிப் பெண்களை பயன்படுத்தி பரிசோதனைகளை மேற்கொள்வது  இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கான அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி உலகில் எங்குமே இல்லை’ என அவர் தெரிவித்தார்.

covid-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பல சுகாதார வழிமுறைகள் மேற்கொள்ளும் பணிகளில் ஆரம்ப சுகாதார சேவைகள். தொற்றுநோய் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சும் ஈடுபட்டு வருகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசி வழங்கும் விசேட நடவடிக்கைகள்  ஏதேனும் உள்ளதா என அடிப்படை சுகாதார வசதிகள் சேவை, தொற்றுநோய் மற்றும்  கொரோனா நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர்  விசேட வைத்திய நிபுணர் சுதர்சன் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயிடம் வினவினோம்.

‘கர்ப்பிணிப் பெண்களுக்கு சிலர் மருந்து வழங்க மாட்டார்கள். அவ்வாறு கவனமாக வயிற்றில் உள்ள கருவை பாதுகாப்பார்கள்.  தடுப்பூசி கர்ப்பிணி பெண்களுக்கு உகந்ததா என சர்வதேச அளவில் பரிசோதனை செய்யப்படவில்லை.  அதனால் கருவுக்கு பாதிப்பு  இல்லையா, பாதுகாக்கப்படுமா என்று ஆய்வு ரீதியில் உறுதி செய்யப்படவில்லை. தொழில்நுட்பக் குழுவால் உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே நாம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

அதனால் நான் அனைத்து கர்ப்பிணிப் பெண்களிடம் கேட்டுக் கொள்வது இதுதான்.
“அனைவரும் வீட்டிலேயே இருங்கள். அதேபோன்று வீட்டிற்கு வருபவர்கள் வைரஸை வீட்டிற்கு கொண்டு  வராமல் இருக்க சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்” என கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்தார்.

ஹர்ஷா சுகததாச
(தமிழில்: வீ.ஆர். வயலட்)


Add new comment

Or log in with...