விவசாயிகளிடம் மேலதிக மரக்கறிகள், பழவகைகளை கொள்வனவு செய்து விநியோகம்

விவசாயிகளிடம் மேலதிக மரக்கறிகள், பழவகைகளை கொள்வனவு செய்து விநியோகித்தல்-Cabinet Decision on June 07-2021

- அரசுமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் சதொசவில்
- அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட 11 தீர்மானங்கள்

கொவிட் 19 பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய இயலாமல் போகும் மேலதிக மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை மொத்தமாக அரசாங்கத்தால் கொள்வனவு செய்து விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் தங்களது உற்பத்திகளை குறிப்பாக மரக்கறிகள் மற்றும் பழவகைகளை வழக்கமான முறையில் போக்குவரத்துச் செய்யவும் விற்பனை செய்யவும் இயலாமையால் அழிவடைந்து போகும் நிலையில், சிறிய மற்றும் நடுத்தர அதேபோல் பாரிய விவசாயிகள் பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றமை தெரிய வந்துள்ளது.

மேலும், நுகர்வோர் நியாய விலையில் தரமான மரக்கறிகள் மற்றும் பழவகைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் விற்பனை செய்ய இயலாத தொகையான மரக்கறிகள் மற்றும் பழவகைகளை மாவட்ட விலைமனுக் குழுவின் விலையின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கும், அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தொகையான மரக்கறிகள் மற்றும் பழவகைகளை பயணத்தடை முடிவுறும் வரை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கும், அனைத்து அரச மருத்துவமனைகளுக்கும், முப்படையினர் மற்றும் இடம்பெயர்ந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கும் தேவைக்கேற்ப இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. துறைமுகத்தால் விடுவிக்கப்படாததும், இலங்கை சுங்கத் திணைக்களத்தால் அரச உடமையாக்கப்பட்டதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்தல்
நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமையால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் பற்றாக்குறையின்றி விநியோகிக்கும் பொறிமுறையொன்று தற்போது லங்கா சதொச நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த பொறிமுறையை தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்கு இயலுமான வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்தால் அரச உடமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சரும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. தேசிய கலாசார கொள்கை சட்டமூலத்தை தயாரித்தல்
2007 ஆம் ஆண்டில் முதன்முறையாக தேசிய கலாசாரக் கொள்கை தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர், குறித்த கலாசார கொள்கை மேலும் திருத்தப்பட்டு தேசிய கலைகள் மற்றும் கலாசாரக் கொள்கையைத் தயாரிப்பதற்காக 2017 ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றாலும், அதற்குரிய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கமைய சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் தேசிய கலாச்சாரக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் உருவாகியுள்ளது. அதற்கமைய தற்போதுள்ள தேசிய கலாசாரக் கொள்கையை மேலும் திருத்தி புதிய கொள்கையைத் தயாரிப்பதற்காகவும், அதற்காக அனைத்துக் கலாச்சாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறித்த விடயம் தொடர்பாக விரிவான அறிவைக் கொண்ட கல்வியலாளர்களுடன் கூடிய குழுவொன்றை உருவாக்கிக் கொள்வதற்கும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. நூறு நகரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் (நூறு நகர வேலைத்திட்டம்)
ஒழுங்கமைக்கப்படாத அபிவிருத்திகளால் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்டங்களில் காணப்படும் நகரங்கள் பல காலமாக நேர்த்தியற்ற, அவலட்சணமான பொதுமக்களுக்கு அழுத்தங்கள் நிறைந்த நகரமாக காணப்படுவதுடன், குறித்த நகரங்களை முறையான திட்டத்துடன் கூடிய வேலைத்திட்டத்திற்கமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு நட்புறவான, கவர்ச்சிகரமான நகரமாக மாற்றுவதற்கு இயலும். அதற்கமைய நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் 100 நகரங்களை அடையாளங் கண்டு அவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, குறித்த நகரங்களை முறையாக அழகுபடுத்துவதற்காக ஏற்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் 'நூறு நகரங்கள்' எனும் பெயரில் வேலைத்திட்டமொன்றை நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கிடையே கல்வி ஒத்துழைப்புக்களை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்
அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உலக தரப்படுத்தல் குறிகாட்டிகளுக்கமைய உயர்மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக உயர்கல்விக்கான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கீழ்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் மணிபால் உயர்கல்விக் கல்லூரியின் மணிபால் உயிரியல் விஞ்ஞானக் கல்லூரிக்கும் இடையேயான கூட்டு ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் ஒன்றியத்தின் விவசாய நிலையத்திற்கும் இடையேயான கூட்டுத் தொழிநுட்ப ஒத்துழைப்புச் செயற்பாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவின் மலயா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அவுஸ்திரேலியாவின் மூன்றாம்நிலைக் கல்வி தரப்பண்பு மற்றும் தரநியமங்கள் தொடர்பான பிரதிநிதித்துவ நிறுவனத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றம், தரவுகளை சான்றுப்படுத்தலின் போதான ஒத்துழைப்புக்கள் மற்றும் நிறுவனங்களை வலையமைப்பாக்குதல் போன்றவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  • பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விவசாய விரிவாக்கல் கல்விப் பிரிவு மற்றும் கனடாவின் அல்பர்டா பல்கலைக்கழகத்தின் விரிவாக்கல் பீடத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

6. நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் தொழிற்சாலைகளை நிலைப்படுத்தல் மற்றும் தொழில் விருத்திக்கான முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டம்
அபிவிருத்தியில் பிரதேச ரீதியான சமனற்றதன்மையைக் குறைத்தல், கிராமிய வளங்களில் உயரிய நன்மைகளைப் பெறல் மற்றும் கிராமங்களில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கைத்தொழில் அமைச்சு மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் இணைந்து பிரதேச செயலக மட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் கீழ் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை ஊக்குவித்தல், அதன்மூலம் கிராமிய மட்டத்தில் பலம்வாய்ந்த தொழில் முயற்சியாளர்களின் வலையமைப்புபை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல், பிரதேச ரீதியாகப் பரந்து காணப்படும் வளங்கள்/மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பெறுமதிசேர் உற்பத்திகளை மேம்படுத்தல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதிக்கான பதிலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100 மில்லியன் ரூபாய்களை முதலீடு செய்யும், 50 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் / வியாபாரங்களை ஆரம்பிக்கும் தொழில் முயற்சியாளர்கள் / முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. வடமத்திய மாகாணத்தில் பிரதேச செயலக மட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தி முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
விவசாயத்திற்கான இரசாயன உரப்பாவனையை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால், எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் பெரும்போகச் செய்கை ஆரம்பிக்கும் போது சேதனப் பசளை உற்பத்திகளை அதிகரித்து போதுமானளவு விநியோகம் செய்வதற்குப் பொருத்தமான வேலைத்திட்டத்தை மேற்கொள்வது அவசியமாகும். அதற்கமைய, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு நிதியத்தின் மூலம் தேவையான அடிப்படை மூலதனத்தை வழங்கி சேதனப் பசளை உற்பத்திக் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்கும், அவ்வாறு தயாரிக்கப்படும் சேதனப் பசளையை, விவசாய அமைச்சின் மூலம் கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கக் கூடிய வகையில் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதிகமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 29 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கி தேவையான மூலப்பொருட்களை குறித்த பிரதேசங்களிலேயே வழங்கி, ஒரு பிரதேச செயலகப் பிரிவில் குறைந்தது ஒரு சேதனப்பசளை உற்பத்தி நிலையமொன்றை தாபித்து, முன்மொழியப்பட்டுள்ள முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. எல்பிட்டிய மஹஹீன்தென்ன பிரதேசத்தில் ஏற்றுமதி விவசாய பெறுமதிசேர் அபிவிருத்திக் கைத்தொழில் வலயத்தை நிறுவுதல்
ஏற்றுமதி விவசாயத்துறையில் பெறுமதிசேர் உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம், சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும், உயர்தர சந்தைகளின் வாய்ப்புக்களை அணுகுவதற்கும் இயலுமை காணப்படுவதால், அதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை எமது நாட்டுக்குக் கொண்டு வருவதற்கும் சந்தர்ப்பம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறான கருத்திட்டங்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக எல்பிட்டிய மஹஹீன்தென்ன பிரதேசத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 64 ஏக்கர் காணியில் ஏற்றுமதி விவசாய பெறுமதிசேர் அபிவிருத்திக் கைத்தொழில் வலயத்தை நிறுவுதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் முதற் கட்டமாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாய நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் வியாபார சாத்தியவள மதிப்பீட்டை மேற்கொண்டு, அடையாளங்காணப்பட்டுள்ள 14 தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்திட்டத்தின் ஆரம்பத்தில் காணித் துண்டுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் விவசாய தொழில் முயற்சியாளர்களைத் தெரிவு செய்வதற்காக இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. இலங்கை பிணைமுறிகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டமூலம்
இலங்கை பிணைமுறிகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள்
தரைஓடுகள் (டயில்) மற்றும் குளியலறை செரமிக் உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது அறிவிடப்படும் செஸ் வரியை திருத்தம் செய்வதற்காக 1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த கட்டளைகள் 2219/15 மற்றும் 2021 மார்ச் மாதம் 15 ஆம் திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கட்டளைகளின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. புதிய களனிப் பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையான நான்கு வழிப்பாதைகளுடன் கூடிய தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடுகளைப் வழங்கல்
புதிய களனிப் பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையான நான்கு வழிப்பாதைகளுடன் கூடிய தூண்களிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த கருத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத வதிவிடக் குடும்பங்கள், சட்டவிரோத வதிவிட உப குடும்பங்கள் மற்றும் 06 பேர்ச்சஸ்களுக்குக் குறைவான காணிகளில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் தெமட்டகொட விளையாட்டரங்குக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் சட்டவிரோதமாக வசிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட 1,100 குடும்பங்களுக்காக மாற்று வீட்டு வசதிகளை வழங்கும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கொலன்னாவ, ஹேனமுல்ல மற்றும் மாளிகாவத்த போன்ற வீடமைப்புத் திட்டங்களில் குறித்த 1,100 குடும்பங்களுக்கான வீடுகளை வழங்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...