யாழ். பொது நூலகமும் ஈழநாடும் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள்

பிரிட்டனில் வசித்துவரும் இரண்டு யாழ்ப்பாணத்துப் படித்த மேதாவிகள் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட திகதி தொடர்பில் முரண்பட்ட கருத்தை கூறுகின்றனர்,..

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு ஜுன் 1 ஆம் திகதி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் அது மே 31 தான் எரிக்கப்பட்டது என பிரிட்டனில் வசித்துவரும் இரண்டு யாழ்ப்பாணத்துப் படித்த மேதாவிகள் தொடர்ந்தும் தமது வாதங்களைத் தொடர்ந்து தெரிவித்து வருவது மிகவும் வேதனையைத் தரும் விடயமாகும். தமிழர்களின் வரலாற்றை இல்லாது ஒழிக்கும் பேரினவாதப் பேர்வழிகளுக்கும் இது சாதகமாவதும் இன்று வரலாகிறது.

நேரில் கண்டவர்களைச் சந்தித்து நூலாக்கியவர்களையும், பத்திரிகைகளையும் நம்பாது அவர்களை 'கதைசொல்லிகள்' என்று ஏளனம் செய்வதும் என்போன்றவர்களை 'ஆய்வுச் சோம்பேறிகள்' என்ற ஒரு புதிய வியாக்கியானத்தில் பழிப்பவர்களையும் திருத்த முடியாத நிலையில் இதனை எழுதுகிறேன்.

கடந்த வருடம் இவர்களில் ஒருவர் புதிய ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். 2015களின் பின் வெளிவந்த சிலருடைய செய்திகளையும் நூல்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார். நான் இவர்கள் இருவருக்கும் எழுதியவற்றையும் அவர்கள் கூறுவதையும் எந்தவித ஒளிவுமறைவுமின்றி இங்கே பதிவிடுகின்றேன்.

இவர்களுக்கான தக்க பதிலை யாரேனும் தமிழன் மீதும் தமிழர்களின் வரலாறு மீதும் உணர்வுபூர்வமான அக்கறையுடையவர்கள் பதில் கூற வேண்டிய கடமையிருக்கிறது. அன்று இந்தியாவிலிருந்து வெளிவந்த தினத்தந்தி, முரசொலி, மாலைமணி, மக்கள் குரல், தினகரன், மாலைமுரசு, தினமலர், எதிரொலி, இந்து முதலிய பத்திரிகைகள் மற்றும் பிபிசி, அகில இந்திய வானொலி, வெரித்தாஸ் போன்றவற்றில் வெளியான செய்திகளை ஆதாரமாக காட்டவேண்டியுள்ளது. இதற்கு மேலாக அன்றைய பத்திரிகை நிருபர்கள் மற்றும் கொமன்வெல்த் பாராளுமன்றக் குழுவில் அங்கம் வகித்து இன்றும் உயிருடனிருக்கும் உறுப்பினர்களையும் பேட்டி காண்பது அவசியம்.

இவற்றைவிட சில பத்திரிகை கட்டுரைகளில் வெளிவந்தது போல இங்கு எடுத்த படங்கள், ஆதாரங்கள், பேட்டிகள் போன்றவற்றை இந்தியாவில் வெளியிட முயற்சி செய்ததாகக் கூறப்பட்டாலும் அவைபற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. புஷ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலிலும் அவர் 294ஆம் பக்கத்தில் 1981ம் ஆண்டு ஜுன் மாதங்களில் பொலிசாரால் நடத்தப்பட்ட தீவைப்புக்கள், அழிவுகளை வீடியோப்படம் எடுத்து இந்தியாவுக்கு கொண்டுவரும்படி நான் கேட்கப்பட்டேன்.... எனக் குறிப்பிட்ட பகுதியை எங்கும் முடித்ததாகத் தெரியவில்லை.

நூலகம் யாருடைய பொறுப்பிலிருந்ததோ அவர்களுடைய கருத்துக்களையும் ஏற்க மறுக்கும் இவர்களை என்ன என்று சொல்ல முடியாதுள்ளது.
ஜுன் 1 ஆந்திகதி இரவு நடந்த சம்பவங்களை இங்கே முதலில் நான் பதிவிட விரும்புகின்றேன்.

ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் மற்றும் பிள்ளையார் ஸ்ரோர்ஸ், அதனருகிலிருந்த கடைகள், மிட்டாஸ்கடைச் சந்தியிலிருந்த வடிவேலு என்பவரது நகைக்கடை, கே.கே.எஸ் றோட்டிலிருந்த புஸ்பா ஜுவல்லறி, முருகன் ஸ்ரோர்ஸ் என்பன எரியூட்டப்பட்டன. சி.எஸ்.கே சந்தியிலிருந்த 5 கடைகள் மற்றும் தேங்காய் விற்பனைக்கடைகள் 3, தர்மேந்திராஸ் நகை அடகுகடை,  பழைய சந்தையிலிருந்த பாய்க் கடைகள், பாக்கு, சீவல், வெற்றிலை, புகையிலை விற்கும் கடைகளும், பசார் வீதிக்கு சமாந்திரமாக இருந்த தொடர் கடைகளில் 12ம் முற்றாக எரிந்தன.

1977 ஆகஸ்ட் 23 அமளியில் எரிக்கப்பட்ட பழமையான சொக்கட்டான் வடிவ சோடிக்
கட்டடத்தின் எஞ்சிய பகுதியை இம்முறை முற்றாக எரித்தனர். இதில் 46 பலசரக்கு கடைகள், பழக் கடைகள் என அனைத்தும் எரிக்கப்பட்டது. 155 பேர் நாளாந்தம் வியாபாரம் செய்து பிழைக்கும் மரக்கறிச் சந்தைக் கடைகளும் இதில் எரிக்கப்பட்டன. இந்த பழைய சந்தைக் கட்டடத்திற்கும் நவீன மார்க்கட் கட்டடத்திற்கும் இடையிலிருந்த 6 கடைகளில் 2  புத்தகக் கடைகளும் 4 தையல் கடைகளும் முற்றாக எரிந்து தரைமட்டமாகக் காட்சி தந்தன.

ஆஸ்பத்திரி வீதியில் இருந்த திருவள்ளுவர் சிலையின் தலையையும் கைகளையும் உடைத்தனர். ஓளவைப்பாட்டியின் மூக்கை உடைத்தனர்.  ஏடுதாங்கிய கையையும் உடைத்தனர். சோமசுந்தரப் புலவரின் தலையை உடைத்து மறுபக்கம் திருப்பிவிட்டிருந்தனர். வலது கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டது.
கால்பெருவிரலையும் அடித்து உடைத்தனர். மகாத்மா காந்தியின் ஒரு காலையும் உடைத்தனர். நவீன சந்தையின் சில கடைகள் ஞாயிறு உடைத்து கொள்ளையிடப்பட்டு எரிக்கப்பட்டபின் திங்களிரவு எஞ்சிய கடைகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பஸ் நிலையத்துக்கு முன்பாக இருந்த டில்கா வாச் வேக்ஸ் உடைத்து கொள்ளையிடப்பட்ட பின் உள்ளுர் கள்ளர்களும் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர். சுப்பையா அன்ட் கோவில் முதல்நாள் உடைத்து எடுத்த மதுபானங்களைத் தவிர எஞ்சியவற்றையும் திருடர்கள் விட்டுவைக்காது எடுத்துச் சென்றனர். ரதி வாச்வேக்ஸ் உடைத்து திருடப்பட்டது. அதன் உரிமையாளர் நடராசா அடுத்தநாள் செய்திகேட்டபின் காலமானார்.

இரவு 10 மணியளவில் பொது நூலக காவலாளிகளை விரட்டியடித்தபின் நூலகக் கதவை கொத்தித் திறந்து உள்ளே நுழைந்து பெற்றோல் ஊற்றிக் கொளுத்தி அழித்தனர். தீயை அணைக்கச் சென்றவர்களை பொலிஸார் தடுத்தனர். சுன்னாகத்தில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த கடைகளும் வேறுபல கடைகளும் அன்றும் தீக்கிரையாகின. இவை அனைத்தும் முடிந்த பின் 2ஆந் திகதி யாழ். மாவட்டத்தில் மாலை ஊரடங்குச் சட்டமும் அவசர காலநிலையும் பிறப்பிக்கப்பட்டதுடன் செய்தித் தணிக்கையும் அமுலுக்கு வந்தது.

பிரிட்டனில் வசித்துவரும் இரண்டு யாழ்ப்பாணத்துப் படித்த மேதாவிகள்  சொல்லும் கருத்தை எம்மால் எவ்வாறு ஏற்றுக் கொள்ளவது.ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும் தமிழர்களின் வரலாற்றை அழிக்க நினைப்பவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.

தங்கராஜா முகுந்தன்
 


There is 1 Comment

சின்ன அற்ப காரணங்களுக்கு முரண்டு. பிடிக்காமல் . தீ வைக்கப்பட்டதா ? மக்கள் பாதிக்கபட்டார்களா ? அதன் பாதிப்பு ஈடு செய்ய. எடுக்க வேண்டிய காரியங்களை. பாருங்கள். சின்ன பிள்ளைத் தனமான கருத்துக்களை. விடுங்கள்

Add new comment

Or log in with...