தொடர்ந்து நடிக்க ஆசைதான்; ஆனாலும் ஒரேயொரு சிக்கல்!

சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ரஜினி, அடுத்த மாதம் அமெரிக்கா சென்று மருத்துவ

பரிசோதனை செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

“தொடர்ந்து நடிக்க எனக்கு ஆசைதான். ஆனால் உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை” என்று உருக்கமாகப் பேசியுள்ளார் ரஜினி.

ரஜினிகாந்த் தனது உடல் நிலை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்திருந்தார். ஆனால் அரசியல் பரபரப்பு தமிழ்நாட்டில் நிலவிய சமயத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.

தற்போது சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ரஜினி, அடுத்த மாதம் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

இதேவேளை நடிகர் தனுஷ், ஹொலிவுட் படத்தில் நடிக்கவென மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் முகாமிட்டு உள்ளார். ரஜினியும் அமெரிக்கா சென்று அவர்களுடன் தங்கி இருப்பார் என்று தெரிகிறது. கொரோனா பரவல் குறைவதை வைத்தே அவரது பயணத் திட்டம் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? இல்லையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் ரஜினி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அப்போது, “மேலும் ஒன்றிரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்க எனக்கு ஆசை உள்ளது. அதற்கு உடல் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை. கொரோனா முடிவுக்கு வந்த பிறகே அடுத்த படம் பற்றி முடிவு செய்வேன். ‘அண்ணாத்த’ படம் என் படங்களில் முக்கியமானதாக இருக்கும். இந்தப் படத்தை எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கவலையாக இருந்தது. இப்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் நல்லபடியாக முடிந்திருக்கிறது. எல்லோரும் வீட்டுக்குப் போய் பத்திரமாக இருங்கள். மீதி இருக்கும் பணிகளை கொரோனா குறைந்த பிறகு செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்தின் 168-வது படம் ‘அண்ணாத்த’ ஆகும். சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிற்றியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

சென்னை திரும்பிய ரஜினி, ‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார். அந்த பணிகள் முடிந்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்காக அவர் ஜூன் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Add new comment

Or log in with...