மீண்டும் விளையாட தயாராகும் மாலிங்க

தேர்வுக்குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

20க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்ற நிலையில் இலங்கையின் யோர்க்கர் நாயகன் லசித் மாலிங்கவை மீண்டும் அணிக்குள் இணைத்துக்கொள்ள இலங்கை அணியின் தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றார். எனினும், ரி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர் இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு எந்தவொரு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில், இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தேர்வில் லசித் மாலிங்க இருப்பதாக தேர்வுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மோர்னிங் ஸ்போட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து வெளியிடுகையில்,

மாலிங்கவை இவ்வருடம் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணத்தில் விளையாட வைக்க எதிர்பார்த்துள்ளோம். அவர் எமது அணித் தேர்வில் உள்ளார். இதற்காக அவரிடம் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

இலங்கையின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான மாலிங்கவை நாங்கள் எப்போதும் மறந்துவிட மாட்டோம். அவரின் சாதனைகள் சொல்லும் அவர் எப்படிப்பட்ட வீரர் என்று. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவரை நேரில் சந்தித்து போட்டிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தேர்வுக் குழுத் தலைவரின் கருத்துக்கு லசித் மாலிங்க பதிலளிக்கையில்,

நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால் ரி 20இல் ஓய்வு பெறவில்லை. என்னைப் போன்ற மூத்த வீரரிடம் இருந்து எப்படி சிறப்பான ஆட்டத்தை தேர்வுக் குழு பெறவுள்ளது என்பதை காண ஆவலுடன் உள்ளேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாடினாலும் என்னால் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்பதை நான் பலமுறை நிரூபித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை 85 சர்வதேச ரி 20 போட்டிகளில் விளையாடி 107 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை அணிக்காக விளையாடுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.


Add new comment

Or log in with...