இலங்கையிலிருந்து குவைத் செல்வதற்கு தற்காலிகத் தடை

இலங்கையிலிருந்து குவைத் செல்வதற்கு தற்காலிகத் தடை-Kuwain Impose Temporary Travel Ban From Sri Lanka-Pakistan-Nepal-Bangladesh

- வேறொரு நாட்டில் 14 நாட்கள் தங்கிய பின் வர அனுமதி
- நாளை நள்ளிரவு முதல் அமீரகம் நுழையவும் தடை

ஒரு சில நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு, தனது நாட்டுக்குள் நுழைவதற்கு, குவைத் தடை விதித்துள்ளது.

கொவிட்-19 பரவல் கருதி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் (KUNA) இதனை அறிவித்துள்ளது.

அந்த வகையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு விமானங்களுக்கு இத்தடை செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றுமொரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்த பின்னர் தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி உள்ளதாக, குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தடுப்பூசியை பெறாத எந்தவொரு நபரும், எதிர்வரும் மே 22 ஆம் திகதி முதல் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிப்பதாக, குவைத் கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நாளை (12) நள்ளிரவுடன் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்கள், ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (அமீரகம்) நுழைவதற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாக, நேற்றையதினம் (10) அந்நாடு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...