பாடசாலைகள் மே 07 வரை தொடர்ந்தும் பூட்டு

பாடசாலைகள் மே 07 வரை தொடர்ந்தும் பூட்டு-Schools Closed Till May 07-GL Peiris

- மீண்டும் பாடசாலை திறப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம்
- அதுவரை ஒன்லைனில் கற்பிக்க நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மே 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

தற்போதுள்ள கொவிட்-19 பரவல் நிலைமைகளின் மே 03 முதல் மே 07 வரையான காலப்பகுதியில் பாடசாலைகளைத் திறப்பது உகந்ததல்ல எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, அதற்கு அடுத்த வாரம் (10) பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் ஆராய்ந்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் மே 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை முடிவெடுக்கப்படும் என ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

எனவே, e-தக்சலாவ, குரு கெதர போன்ற திட்டங்கள் மூலம் தொலைதூர கல்வி முறை மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கையைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் முன்னுரிமை வழங்கி குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாடத்திட்டங்களை முழுமைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஓகஸ்ட் விடுமுறையை முடிந்தளவில் குறைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த தீர்மானத்திற்கு அமைய, நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மேற்படி தினம் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...