ஸஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் TIDயினால் கைது

ஸஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் TIDயினால் கைது-3 Arrested for Attending Extremist Idelogy Classes Including Zahran Hashim's Father In Law

- குளியாபிட்டி, கெக்குணுகொல்லவைச் சேர்ந்த 40, 52, 55 வயதுடையவர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான ஸஹ்ரான் ஹாசிமினால், மேற்கொள்ளப்பட்ட கடும்போக்குவாதம் தொடர்பான வகுப்புகளில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் 3 சந்தேகநபர்களை, TID யினர் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, குறித்த தாக்குதல் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) மற்றும் குற்ற புலனாய்வு பிரிவினர் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கமைய, குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான ஸஹ்ரான் ஹாசிமினால், கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கடும்போக்குவாதம் தொடர்பான வகுப்புகள் நடாத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறான வகுப்புகளில் கலந்து கொண்ட மற்றும் அதனை ஒழுங்கு செய்த பல சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் இவ்வாறான கடும்போக்குவாத வகுப்புகளில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்கள் மூவர் நேற்றையதினம் (22) குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி, கெக்குணுகொல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஸஹ்ரான் ஹாசிமின் மாமனார் (மனைவியின் தந்தை) உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 40, 52, 55 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் தற்போது TID யிற்கு அழைத்து வரப்பட்டு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...