கொழும்புக்கான விமான சேவைகளை அதிகரிக்கும் எமிரேட்ஸ் நிறுவனம்

கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தனது விமான சேவைகளை 6- இலிருந்து 7- ஆக அதிகரிப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. அதிகரிக்கப்படும் 7ஆவது விமான சேவையானது எதிர்வரும் மே 3 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

சந்தையில் காணப்படும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காகவும் கொழும்புக்கும் கொழும்பிலிருந்தும் துபாய் ஊடான தொடர்புகளை அதிகரிப்பதற்காகவும் இந்த மேலதிக சேவை உதவும்.

புதிதாகச் சேர்க்கப்பட்ட விமான சேவையானது ஒவ்வொரு திங்கட்கிழமையும் செயற்படும். EK650 என்ற இந்த எமிரேட்ஸ் விமானம், துபாயிலிருந்து அந்நாட்டு நேரப்படி அதிகாலை 02:05 க்குப் புறப்பட்டு, கொழும்பை இலங்கை நேரப்படி காலை 08:00 மணிக்கு வந்தடையும்.

திரும்பிச் செல்லும் விமானம், இலங்கை நேரப்படி காலை 09:30க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு, துபாயை அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:15க்கு அடையும். எமிரேட்ஸ் வலையமைப்புக்குள் காணப்படும் 90க்கும் மேற்பட்ட பயண இடங்களுக்கு துபாய் ஊடாக, பாதுகாப்பானதும் சௌகரியமானதுமான பயணங்களை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.

விசாலமான Boeing 777-300 ER வகை விமானத்தை, கொழும்புக்கான சேவைகளுக்கு எமிரேட்ஸ் நிறுவனம் பயன்படுத்துகிறது. எமிரேட்ஸ் நிறுவனத்தின் இணையத்தளமான emirates.com எமிரேட்ஸ் விற்பனை அலுவலகங்கள், அல்லது பயண முகவர்கள் மூலமாகப் பயணச்சீட்டுக்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

எமிரேட்ஸ் நிறுவனம் கொழும்புக்கான தனது சேவைகளை வாராந்தம் 4-இலிருந்து 6-ஆக இவ்வாண்டு பெப்ரவரியில் அதிகரித்திருந்தது. மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட ஐந்தாவது வாராந்த விமான சேவை பெப்ரவரி 18ஆம் திகதியும், ஆறாவது விமான சேவை பெப்ரவரி 27ஆம் திகதியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இலங்கைக்கான பயண நடவடிக்கைகளை 1986ஆம் ஆண்டு ஆரம்பித்த எமிரேட்ஸ் நிறுவனம், கொழும்புக்கான அதன் சேவைகளின் 35 ஆண்டுகள் நிறைவை அண்மையில் கொண்டாடியிருந்தது. இச்சேவைக்கான முக்கியமான மைல்கல்லாக இது அமைந்திருந்தது.

கடந்தாண்டில் கொழும்பிலிருந்து வெளிச் செல்லும் பயணச் சேவைகளை முதலில் மீள ஆரம்பித்த சர்வதேச விமான சேவைகளில் ஒன்றான எமிரேட்ஸ், வெளிநாட்டுப் பிரஜைகளினதும் இலங்கையர்களினதும் பயணங்களை மேற்கொள்ள உதவியிருந்தது. நிறுவனத்தின் சரக்குப் பிரிவான எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ ((Emirates SkyCargo)), வாராந்தம் நான்கு சரக்கு விமானங்களைச் செயற்படுத்தி, முக்கியமான வர்த்தகத் தொடர்புகளைப் பேணுவதன் மூலமாகவும், கொழும்பிலிருந்தும் கொழும்புக்கும் பொருட்களைக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கை ஆற்றுவதன் மூலமாகவும் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் தமது பயணத்தைத் திட்டமிடுவதற்கு நெகிழ்வுத் தன்மையையும் நம்பிக்கையையும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணச் சீட்டுப் பதிவு ஏற்பாடுகள் வழங்குகின்றன. டிசெம்பர் 31, 2021க்கு முன்னர் பயணிப்பதற்காக செப்டெம்பர் 30, 2020க்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட விமானப் பயணச்சீட்டுகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள், 36 மாத காலப் பகுதிக்குள் எப்போதாவது பயணிப்பதற்கு மீள்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

டிசம்பர் 31, 2021க்கு முன்னர் பயணிப்பதற்காக ஒக்டோபர் 01, 2020க்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட விமானப் பயணச் சீட்டுகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள், அது பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் எப்போதாவது தமது பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்த முடியும்.


Add new comment

Or log in with...