வீதி விபத்துக்களால் 7​ நாட்களில் 69 பேர் பலி

அவதானமாக இருக்க பொலிஸ் அறிவுரை

நாடு முழுவதும் 07 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் காரணமாக 69 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி காலை 06.00 மணி தொடக்கம் நேற்று 20ஆம் திகதி காலை 06.00 மணிவரையான காலப் பகுதியில் பதிவான விபத்துக்கள் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக வீதி விபத்துக்கள் காரணமாக அன்றாடம் 06 அல்லது 07 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ள நிலையில் தற்சமயம் அந்த எண்ணிக்கை 09 முதல் 10 ஆக உயர்வடைந்துள்ளது.

இது இவ்வாறு தொடருமானால் ஆண்டொன்றுக்கு 3,650 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த மார்ச் 04 ஆம் திகதி மாத்திரம் வீதி விபத்துக்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 3,556 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுப்பிரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...