அனைத்து பிரஜைகளுக்கும் நீதியான ஆட்சி வழங்குவதே அரசின் இலக்கு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின்  முஸ்லிம் விவகார இணைப்புச்  செயலாளர் அப்துல் சத்தார் பேட்டி

நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் நீதியான, சரிசமமான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் குறிக்ேகாள் என்று கூறுகின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார். தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

கேள்வி: இன்று அரசியல் மட்டத்தைப் பார்க்கும் போது எதிர்ப்புகளும் அவதூறுகளும் சரளமாக மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் குறுகிய காலத்திற்குள் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. எதிர்த்தரப்புகள் அரசை குறுகிய காலத்திற்குள் வீழ்த்த முடியும் என்றும் எதிர்த் தரப்பினால் ஆட்சிக்கு வர முடியும் என்றும் சவால் விடுவது மட்டுமல்லாமல், மக்களின் முழுப் பார்வையையும் அவர்களின் பக்கத்திற்கு திசைதிருப்ப பலமான முயற்சியில் ஈடுபட்டிருப்பது எங்களுக்கு தெரிகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன?

பதில்: உங்களின் கூற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். உண்மையிலே அரசாங்கத்தின் எதிர்த் தரப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக பொய்ப் பிரசாரங்களையும் வதந்திகளையும் முன்னெடுத்து வருகின்றன. அது மட்டுமல்லாது ஒவ்வொரு சம்பவத்தையும் கையில் எடுத்துக் கொண்டு அரசை விமர்சிப்பதில் மிகவும் வல்லுனர்களாக இருப்பதை எங்களால் மறுக்க முடியாது. இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விடயங்கள் அவைதான். நல்லாட்சி என்ற போர்வையில் அன்று நாட்டுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பாதகமான பிரதிபலன்கள் அதிகம்.

நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற செயற் திட்டங்கள், வியாபார ஒப்பந்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி போன்ற விடயங்களின் பிரதிபலன்தான் இன்று நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பான அரச பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் அலுவலக ரீதியாக இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டிருந்தாலும் கடந்த அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவு வழங்கியவர்களாவர். இந்த தரப்பினரை சரியாக அடையாளம் காணாது அவர்களையே மீண்டும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு அரசாங்கம் வைத்திருப்பது அல்லது அவர்களை பாவிப்பது மனம் வருந்தக் கூடியதாகும்.

 

கேள்வி: முஸ்லிம்கள் மீதான நடவடிக்கைகள் சமகால அரசியல் நகர்வுகள் முஸ்லிம்களுடைய விவகாரம் சம்பந்தமாக அரசாங்கத்தின் ஒரு முக்கிய பிரமுகர் என்ற வகையில் நீங்கள் கூறும் கருத்து என்ன?

 

பதில்: சிறுபான்மை முஸ்லிம் சமூகமான நாங்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்ந்து வந்தவர்கள். இலங்கையின் சுதந்திரத்திற்கும் முன்பும் பின்பும் அது போல் மன்னர்கள் ஆட்சி செய்த காலம் தொட்டு முஸ்லிம்களான நாங்கள் மிகவும் கௌரவமாக வாழ்ந்து வந்தோம். இருந்தாலும் அண்மைக் கால நிகழ்வுகள் காரணமாக இன்று இந்நாட்டு முஸ்லிம்கள் விரும்பியோ விரும்பாமலோ அனுபவித்துக் கொண்டிருக்கும் அவதிகள் எங்கள் மனதை மிகவும் வேதனை கொள்ள வைக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை ஒரு நல்ல மனோநிலைக்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் சுயமரியாதையுடன் கௌரவமாக வாழக் கூடிய இலங்கையை அமைக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு எம் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆதலால் அப்படியான சூழலை அமைப்பதற்கு உரிய சக்தியையும் வசதியையும் தர வேண்டும் என்று ஆரம்பத்தில் இறைவனை நான் பிரார்த்திக்கின்றேன்.

முஸ்லிம்கள் என்ற வகையில் நாங்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது மார்க்க விடயங்களில் கொள்கைகளை உடையவர்களாக இருந்தாலும் அந்நிய சமூகத்தின் முன்னால் நாங்கள் செல்லும் பொழுது அல்லது பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பொழுது தாக்கங்கள் வரும் பொழுது அவைகளுக்கு நாங்கள் முஸ்லிம்கள என்ற வகையில் தாக்குப் பிடிக்க வேண்டும்.

 

கேள்வி: இலங்கை முஸ்லிம்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு எப்படியான நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காணலாம் என்று சொல்கின்றீர்கள்?

 

பதில்: நாங்கள் இன்று இருக்கும் யதார்த்த நிலையை சிந்திக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். உண்மையாகவே இப்படியான பிரச்சினைகளில் இருந்து நாங்கள் எப்படி மீள்வது என்பதை சிந்திக்கவும் அது சம்பந்தமாக செயல்படவும் வேண்டிய மிகவும் இக்கட்டான கடைசி சந்தர்ப்பம் இது.

நான் இலங்கையின் பிரஜை அல்லது ஸ்ரீலங்கன் என்ற மனோ நிலையில் இருந்து பேசுவதையே விரும்புகிறேன். எங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கே எங்கள் பெற்றோரால் ஒரு பெயர் வைக்கப்படுகிறது. அதிலும் நாங்கள் வாழும் வாழ்க்கையை அல்லது எங்கள் நடவடிக்கைகளை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு எங்களுக்கு என்று ஒரு மார்க்கம் உள்ளது.

நாங்கள் கொள்கை அடிப்படையில் அப்படி பிரிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் எங்கள் உடம்புக்குள் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தமும் நாங்கள் பிறப்பதும் இறப்பதும் வித்தியாசம் இல்லை. எங்கள் சமய நடவடிக்கைகளை வணக்கத்தலங்களுக்குள் மட்டுமே செய்யக் கூடிய நிலைக்கு நாங்கள் வர வேண்டும்.

அரசியல் இலாபங்களுக்காக அல்லது எங்கள் சுயதேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாங்கள் மிகவும் புனிதமாக நேசிக்கும் எங்கள் சமயத்தை பலிகொடுக்கக் கூடாது.

சமாதானத்தை அல்லது ஒற்றுமையை போதிக்க வேண்டிய சமயத் தலைவர்கள் அரசியல்வாதிகளை விட மோசமான நிலையில் மக்களிடத்தில் பிளவு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டு இருப்பது வேதனையைத் தருகிறது.

நாளுக்கு நாள் அபாயமான எதிர்காலத்தை ஒவ்வொரு சமூகமும் எதிர்நோக்கி கொண்டு இருக்கின்றோம். இதற்கெல்லாம் முக்கிய காரணமாக நான் கருதுவது எங்கள் எந்த சமூகத்திடமும் எங்களுக்கு உரிய இறையச்சமோ அல்லது மார்க்கமோ இல்லை என்பதே. ஏதாவது ஒரு சமயம் போதிப்பது போன்ற ஆட்சி இந்த நாட்டில் நிறைவேறும் என்றால் நிச்சயமாக அன்றுதான் எங்கள் நாட்டிற்கும் எங்கள் மக்களுக்கும் விடுதலை கிடைக்கும்.

இந்த நாட்டில் நடந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றின் மூலமும் நாங்கள் கசப்பான அனுபவங்களை கொண்டவர்களாக இருக்கின்றோம். இந்தக் கருத்துகள் அரசியல் கட்சியைச் சார்ந்தவை அல்ல.

இந்த நாட்டில் நான் கண்ட அனுபவங்கள் நான் அனுபவித்த வேதனைகளை வைத்து சொல்பவை. இந்த நாட்டில் சீரழிக்கப்படுவது அல்லது சிதைக்கப்படுவது பௌத்தனாக இருந்தாலும் ஒரு கத்தோலிக்கனாக இருந்தாலும் ஒரு தமிழனாக இருந்தாலும் ஒரு இந்துவாக இருந்தாலும் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் இவர்கள் எமது நாட்டு பிரஜைகள் அல்லது எமது ஒரு சகோதரன் என்னும் எண்ணத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

 

கேள்வி: நீங்கள் சொல்லும் கருத்துகளில் நான் நிறைய நியாயத்தைக் காண்கின்றேன். இந்த அடிப்படையில் இன்று ஆட்சியில் இருப்பது உங்கள் அரசாங்கம் ஆதலால் அரசாங்க தரப்பில் இருந்து கொண்டு இவைகளை எப்படி அணுகலாம் அல்லது நீங்கள் சொல்லக் கூடிய ஒரு நாட்டை எப்படி உருவாக்கலாம்?

 

பதில்: அப்படி என்றால் நீங்கள் கேட்கும் கேள்வியிலேயே இதற்கு பதிலும் உள்ளது. இன்று இந்த நாட்டில் ஒரு பலமுள்ள அரசாங்கம் உள்ளது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்கள். இந்த அடிப்படையில் முக்கியமாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆட்சியை அமைப்பதற்கு உடந்தையாக இருக்க வில்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட்டாலும் ஆட்சிக்கு வந்ததன் பின்பு இந்த நாட்டில் சகல மக்களுக்கும் ஒரு நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கம். கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் கோரிக்ைகக்கு தீர்வு கிடைத்தது.

நாட்டின் எல்லா பாகங்களிலும் அபிவிருத்தி திட்டங்கள் நடைபெறுகின்றன. சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தேசியப் பட்டியலில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்பட்டதுடன் நாட்டின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.

அது மட்டுமல்லாமல் அரசின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டமை உட்பட பல நடவடிக்கைகளை அரசாங்கம் செய்துள்ளது.

அந்த வகையில் எங்களோடு தூரமாக இருந்து அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கும் அரசாங்கம் மீது வீண் பலிபோடுபவர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்கின்றேன். எங்களோடு ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டி எடுப்புவதற்கு வருமாறு அன்பாக அழைக்கிறேன். முக்கியமாக இந்த நாட்டில் முஸ்லிம்களுடைய அமைப்புக்கள் சம்மந்தமாக பேசப்படுகிறது.

அன்று ஆயுதம் ஏந்தி இந்த நாட்டில் பல அழிவுகளை மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி, விடுதலைப் புலிகள் அமைப்பினர், கொடூரமான சேதங்களை ஏற்படுத்தியவர்கள் இன்று ஜனநாயகத்திற்கு திரும்பி நல்ல முறையில் அமைச்சர்களாக அல்லது இந்த ஆட்சியின் பங்காளர்களாக பெரும்பான்மை சமூகத்தோடு மிகவும் நெருக்கமானவர்களாக உள்ளனர்.

ஆதலால் நான் இறுதியாக சொல்வது நல்ல மனோநிலையில் நாம் சிந்திக்க வேண்டும்.

சந்தர்ப்பவாதிகளாக நாங்கள் செயல்படாது மற்றவர்களை கௌரவப்படுத்தக் கூடிய, மற்றவர்களின் வாழ்க்கைக்கு மதிப்பளிக்கக் கூடியவர்களாக நாம் வாழ வேண்டும். எங்களைப் போல் மற்ற சமூகங்களையும் நினைக்க வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொருவர் மீதும் அன்பு காட்டக் கூடிய கௌரவப்படுத்தக் கூடியவர்களாக எங்கள் மனோ நிலையை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டுக்கு விடுதலையோ விமோசனமோ நிம்மதியோ கிடைக்காது என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

 

நேர்காணல்:

இக்பால் அலி

 


Add new comment

Or log in with...