தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க ஒன்றிணையுமாறு அழைப்பு

சம்பந்தன் தரப்பிற்கு வியாழேந்திரன் பகிரங்க அழைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அனைவரும் ஒன்றாகச் சென்று ஜனாதிபதி, பிரதமருன் பேசுவோம் என தான் , சம்பந்தன் ஐயா உட்பட அனைவருக்கும் பாராளுமன்றத்தில் வைத்து அழைப்பு விடுத்ததாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் இரு வலிமையான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்த கட்டமைப்பினூடாக எமது மக்களுக்கான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

நீண்டகாலமாக புரையோடிப்போய்க்கிடக்கின்ற மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தோடு இராஜதந்திரமாக பேசி தீர்க்கவேண்டும்.

கடந்தகாலத்திலே எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கின்ற விடயத்திலே கவனம் செலுத்தினார்களே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இந்த மாவட்டத்திலே எமது சகோதர முஸ்லிம் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சியை பாருங்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசுடன் இணைந்துகொண்டு தங்கள் மக்களின் அபிவிருத்தி சார்ந்த அரசியலை தொடர்சியாக முன்னெடுத்து வந்ததால் அவர்கள் கடந்த காலத்தில் அபிவிருத்திக்காக போராடி இன்று இந்த மாவட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் எந்த உரிமையையும் இழக்காத சமூகமாக காணப்படுகின்றனர்.

முஸ்லிம் மக்களின் உடலை எரிக்க கூடாது அதை புதைக்கவேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினார்கள், அரசுடன் பேசினார்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஜனாதிபதி, பிரதமர், அரச சம்பந்தப்பட்ட அமைச்சர்களோடு பேசினார்கள்.

ஆனால் எமது அரசியல் தலைவர்களைப் பொறுத்தளவிற்கு கடந்த ஏழு தாசாப்த காலமாக ஒரேவிடயத்தை பேசினர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் பல வகையிலும் மற்றைய சமூகத்துடன் ஒப்பிடும் போது நில, வள, பொருளாதாரம், கல்வி என பல வகைகளில் நாம் பின்னடைவை கண்ட சமூகமாக தமிழ் சமுகம் காணப்படுகின்றது.

மலையகத்தில் ஆயிரம் ரூபா சம்பளம் கேட்டு எதிர்க்கட்சியிலே ஒரு பிரிவினர் சத்தம் போட்டு பேசினார்கள், எதிர்கட்சியில் சிலர் அரசுக்கு ஆதரவு வழங்கினார்கள். அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக அரசியல்வாதிகள் அரசுக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள்.

எதிர்கட்சியிரும் ஆளும்கட்சியிலும் இருந்து அரசுக்கு ஏதோவொருவகையில் அழுத்தத்தை கொடுத்து அரசுடன் பேசியபடியினால் இன்று அந்த ஆயிரம் ரூபா சம்பளத்திற்கான இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பந்தன் ஐயா உட்பட அனைவரும் வாருங்கள், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அனைவரும் ஒன்றாகச் சென்று ஜனாதிபதி பிரதமருன் சென்று பேசுவோம். நாம் தயாராக இருக்கின்றோம்.எமது மக்களின் பிரச்சினை தொடர்பாகவும் அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் நாம் முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...