இறக்குமதி உணவுப் பொருட்களில் நச்சு பதார்த்தங்கள்; விரிவான விசாரணைக்கு அறிவுறுத்தல்

- சுகாதார அமைச்சுக்கு கோபா குழு அறிவுறுத்தல்

நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களில் உள்ளடங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான அதிகாரம் சுகாதார அமைச்சுக்கே இருப்பதாகவும், இதற்கமைய உணவுப் பொருட்களில் காணப்படும் தீங்கிளைக்கும் பதார்த்தங்கள் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA), சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

உணவுகளைப் பரிசோதனை செய்வதற்கான ஆய்வுகூட வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்டம் விரைவில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.

உணவுகளைப் பரிசோதனை செய்யும் ஆய்வுகூடங்களுக் கிடையில் உரிய தொடர்புகள் இன்மையால் நிலைமை தற்பொழுது மோசமடைந்துள்ளது என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முன்னாள் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய வேலைத்திட்டமொன்று இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், மற்றும் 2017 / 2018 ஆண்டு காலப் பகுதியில் சுகாதார அமைச்சு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, சுகாதார அமைச்சின் செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கூடியபோதே இவ்விடயங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டன.

சுகாதார அமைச்சின் சட்ட திட்டங்களே உணவுப் பாதுகாப்புக்காக நடைமுறைப்படுத்தப்படுவதால், உணவுகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பது அவசியமானது என்றும் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, வைத்தியகலாநிதி உபுல் கலப்பதி, வீரசுமன வீரசிங்ஹ ஆகியோரும், சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்தி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஐந்து வருடங்களில் புத்தாக்கத்திட்டங்களை ஊக்குவிக்க 346 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 34 புத்தாக்க ஆய்வுத் திட்டங்களுக்காக 399 மில்லியன் ரூபா அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் குழு விசேட கவனம் செலுத்தியது.

2006ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் 31.71 மில்லியன் ரூபா செலவில் 224 கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும் 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் இருப்பது தொடர்பில் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.


Add new comment

Or log in with...