சுகாதார வழிகாட்டுதல்களில் கூடுதல் கவனத்தின் தேவை

கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ள போதிலும் கூட அதன் பரவுதல் அச்சுறுத்தல் நீடித்த வண்ணமுள்ளன. கடந்த டிசம்பர் நடுப்பகுதி முதல் உலகின் பல நாடுகளும் அவசரத் தேவையின் நிமித்தம் இத்தடுப்பூசிகளைத் தம் பிரஜைகளுக்கு வழங்கி வருகின்றன. அவை பாவனைக்கு வந்து சுமார் நான்கு மாதங்களாகியுள்ள போதிலும் இத்தொற்றின் அச்சுறுத்தல் குறைந்த பாடில்லை.

இவ்வாறான நிலையில் இத்தடுப்பூசி பெற்றுக்கொள்கின்றவர்களில் ஒரு சிலருக்கு தீவிர பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா செனகா நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகளில் பெற்றுக்கொண்ட சிலருக்கு இரத்தம் உரைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. அதனால் இத்தடுப்பூசிப் பாவனையை சில ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதோடு சில நாடுகள் மீண்டும் அதனை வழங்கவும் ஆரம்பித்துள்ளன. இதேவேளை அமெரிக்க சுகாதாரத் துறை ஜொன்ஸன் ஜொன்ஸன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் பாவனையை இடைநிறுத்துவதற்கு சிபாரிசு செய்துள்ளது.

இதன்படி இத்தொற்று தவிர்ப்புக்கான தடுப்பூசிகளும் சிலருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடியனவாக இருப்பது தெரிகின்றது.

ஆன போதிலும் பிரான்ஸ், இந்தியா, பங்களாதேசம் உள்ளிட்ட பல நாடுகளில் இத்தொற்று மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இத்தொற்றின் பரவுதலைக் கடும் முயற்சியின் ஊடாகக் கடந்த ஒக்டோபர் நவம்பராகும் போது இந்தியா பெருவீழ்ச்சி நிலைக்கு கொண்டு வந்ததோடு ஜனவரி நடுப்பகுதி முதல் தடுப்பூசி வழங்கலும் ஆரம்பமாகின.

இந்நிலையில் இத்தொற்றின் பரவுதலை தவிர்த்துக் கொள்வதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் மக்கள் அசிரத்தை காட்டத் தொடங்கினர். இத்தொற்று தவிர்ப்புக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும் பாதுகாப்பு கிடைக்கப்பெற்று விட்டது என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாகியுள்ளதும் ஒரு காரணமாகியுள்ளது.

ஆனால் கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பூசிகள் இத்தொற்றின் தாக்கத்தின் தீவிரத் தன்மையையும் உயிராபத்து அச்சுறுத்தலையும் குறைக்குமே தவிர இத்தொற்றுக்கு உள்ளாவதைத் தடுக்காது. அதன் விளைவாகவே இத்தடுப்பூசிகள் பெற்றவர்கள் கூட மீண்டும் இத்தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

என்றாலும் இலங்கை முன்னெடுத்த பரந்துபட்ட கடும் முயற்சியின் பயனாக இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை தற்போது பெரு வீழ்ச்சி நிலைக்கு வந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீரவின் கூற்றுப்படி, 'உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென் கிழக்காசியப் பிராந்திய நாடுகளில் இலங்கையிலும் இந்தோனேசியாவிலும் மாத்திரமே கடந்த இரு வாரங்களாக இத்தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மற்றப்படி ஏனைய எல்லா நாடுகளிலும் இத்தொற்று மீண்டும் தீவிரமாகப் பரவி வருகின்றது'.

அதனால் இலங்கை மக்களும் இத்தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் கவனயீனமாக நடந்து கொள்ளக்கூடாது. தற்போது நாட்டில் இத்தொற்று குறைவடைந்துள்ள போதிலும் அத்தொற்று முழுமையான கட்டுப்பாட்டு நிலையை அடையவில்லை. அதனால் தொடந்தும் முன்னெச்சரிக்கையோடு சுகாதார வழிகாட்டல்களைக் பேணிக்கொள்ள வேண்டும்.

தற்போது சிங்கள, தமிழ் புத்தாண்டு காலமாக விளங்குகின்ற அதேநேரம், முஸ்லிம்களின் ரமழான் நோன்பு காலமும் ஆரம்பமாகியுள்ளன. குறிப்பாக புத்தாண்டு மற்றும் நோன்பு காலம் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பேணி நடந்து கொள்ளத் தவறக்கூடாது. இத்தொற்று தவிர்ப்புக்கான பிரதான சுகாதார வழிகாட்டல்களாக விளங்கும் முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதைய சூழலில் பிரயாணங்களை தவிர்த்துக் கொள்வதே சிறந்தது என்பது தான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும். பிரயாணம் செல்ல நேருமாயின் பிரயாணம் நிறைவடையும் வரையும் முகக்கவசம் அணித்திருக்குமாறும் பயணம் நிறைவடைந்ததும் கைகளை நன்கு கழுவிக் கொள்ளுமாறும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி புழக்கத்திற்கு வந்துள்ள போதிலும் இத்தொற்று பரவுதல் அச்சுறுத்தல் நீடித்து வருவதால் அதனைத் தவிர்த்துக் கொள்வதற்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய ஒழுங்கில் கடைபிடிப்பதே சிறந்த நிவாரணமாகும். இது விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த மார்க்கமாக அமையும்.


Add new comment

Or log in with...