பிரபல பாதாளக்குழு உறுப்பினர் 'சீட்டி' கைது; வீட்டில் பதுங்கு குழி

பிரபல பாதாளக்குழு உறுப்பினர் 'சீட்டி' கைது; வீட்டில் பதுங்கு குழி-Underworld Figure Sarath Kumara Alias 'Cheeti' Arrested-Found a Bunker

- அங்கொட லொக்காவினால் குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்ட முதலாவது நபர்

இன்று (09) காலை முல்லேரியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 'சீட்டி' என அழைக்கப்படும் சரத் குமார எனும் 44 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்பைடயினர் (STF) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே பாதாளக்குழு உறுப்பினரான குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்தியாவில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் 'அங்கொட லொக்கா' எனும் பாதாளக்குழு தலைவரினால் குற்றங்களை மேற்கொள்வதற்காக ஈடுபடுத்தப்பட்ட முதலாவது நபரே இச்சந்தேகநபர் என தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சந்தேகநபர் மீது கொலை, கொள்ளை,  உள்ளிட்ட நிலுவையிலுள்ள 9 வழக்குகள் காணப்படுவதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி வெலிகமவில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 112 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்ப்ட சம்பவத்துடன் தொடர்பான 9ஆவது சந்தேகநபரே இந்த 'சீட்டி' என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 44 வயது சந்தேகநபர் முல்லேரியாவில் உள்ள தனது வீட்டில் நிலத்தடி பதுங்கு குழியில் பதுங்கி இருந்துள்ளமையும் விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளதோடு, குறித்த பதுங்குகுழியையும், விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக, பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.


Add new comment

Or log in with...