நிர்வாண படமெடுத்தோரை நாடு கடத்துவதற்குத் திட்டம் | தினகரன்

நிர்வாண படமெடுத்தோரை நாடு கடத்துவதற்குத் திட்டம்

டுபாயில் மாடி முகப்பு ஒன்றில் நிர்வாணமாக படம் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

இந்த நிர்வாண வீடியோ சமூக ஊடகத்தில் வெளியானதை அடுத்தே குறைந்தது 12 உக்ரைன் பெண்கள் மற்றும் ரஷ்ய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

பொது இடத்தில் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆறு மாத சிறை மற்றும் 5,000 திர்ஹம் அபராதத்திற்கு முகம்கொடுக்கும் நிலை இருந்தது.

டுபாய் பிரபல சுற்றுலா தலமாக இருந்தபோதும் அங்கு கடுமையான சட்டங்கள் அமுலில் உள்ளன. டுபாயில் வாழ்பவர்கள் மற்றும் அங்கு பயணிப்பவர்கள் இந்த சட்டங்களுக்கு கட்டுப்படுவது அவசியமாகும்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தில் பங்கேற்றவர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர் என்று டுபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இவ்வாறான செயலுக்காக நாடுகடத்தப்படுவது டுபாயில் அரிதான ஒன்றாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள சட்டங்கள் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பொது இடத்தில் காதலை வெளிப்படுத்துவது, ஓரின சேர்க்கை உறவுகள் போன்ற செயல்பாடுகளுக்காக சிலருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...