கொவிட்–19: பிரேசிலில் ஒரே நாளில் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | தினகரன்

கொவிட்–19: பிரேசிலில் ஒரே நாளில் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் திரிபினால் நோய்த் தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் முதல் முறையாக உயிரிழப்பு எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது.

மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் சில நகரங்களில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சூழலில் பலர் உயிரிழந்து வருவதோடு பல பகுதிகளிலும் சுகாதார கட்டமைப்பு நிலைகுலைந்துள்ளது.

பிரேசிலில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 337,000ஐ தொட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கு மாத்திரமே இரண்டாவதாக உள்ளது.

எனினும் கொரோனா வைரஸை கட்டுப்பாடுத்துவதற்கான முடக்கநிலைக்கு ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.

ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை விமர்சித்ததோடு எந்த ஆதாரமும் இல்லாத இந்த நடவடிக்கை உடல் பருமன் மற்றும் மன அழுத்தத்திற்கு காரணமாவதாகவும் தெரிவித்தார்.

எனினும் முந்தைய 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 4,195 கொரோனா தொற்றுடன் தொடர்புபட்ட உயிரிழப்புகள் பற்றி அவர் கருத்துக் கூறவில்லை.

பிரேசிலில் கொரோனா தொற்று சம்பவங்கள் 13 மில்லியனைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த நோய்த் தொற்றினால் 66,570 பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய மாதத்தை விடவும் இரட்டிப்பாக இருந்தது.

'பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் சர்வதேச சமூகத்தின் ஒட்டுமொத்த முயற்சிக்கும் பிரேசில் தற்போது அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரேசிலில் நோய்த் தொற்றுக் குறித்து தீவிரமாக கண்காணித்து வரும் டொக்டர் மிகுலா நிகொலெலிஸ் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

'ஒவ்வொரு வாரத்திலும் புதிய வைரஸ் திரிபுகளை நாம் சந்தித்திப்பதோடு அது எல்லை தாண்டி செல்வதன் காரணமாக பிரேசிலில் நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் உலகம் பாதுகாப்பானதாக இருக்காது' என்று அவர் தெரிவித்தார்.

பிரேசிலின் பெரும்பாலான மாநிலங்களில் 90 வீதமான அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களை கொவிட்–19 நோயாளர்கள் ஆக்கிரமித்திருப்பதாக சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. பல மாநிலங்களில் ஒட்சிசன் மற்றும் மயக்க மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நெருக்கடியான சூழலிலும் சில நகரங்கள் மற்றும் மாநிலங்கள் ஏற்கனவே மக்கள் நடமாட்டம் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

மறுபுறம் பிரேசிலில் தடுப்பீசி வழங்கும் செயற்பாடும் மந்தமா இடம்பெற்று வருகிறது.

பிரேசிலின் மக்கள் தொகையில் 10 வீதத்தினருக்கு மட்டுமே முதல் முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தது 20 நாட்களுக்கு முடக்க நிலையைச் செயல்படுத்துவதே, வைரஸ் பரவலை மெதுவடையச் செய்ய ஒரே வழி எனத் தொற்றுநோய் நிபுணர்கள் நம்புகின்றனர்.


Add new comment

Or log in with...