வாழ்வாதார வருமானம் தரும் தடாக மீன் வளர்ப்பு

இயற்கை நீர்நிலைகளைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித்  தொழில் என்பது மிக முக்கியமான ஒன்று. கிழக்கின் பொருளாதாரத்தில் மீன்பிடித்  தொழில் பெரும் பங்களிப்பு வழங்குகின்றது.  

கடல், வாவிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் காணப்படும்  கிழக்கு மாகாணத்தில் நண்ணீர் மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் தடாக மீன்  வளர்ப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

‘சுபீட்சத்தின் இலக்கு’ எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்  கீழ் கிழக்கு மாகாண விவசாய மற்றும் மீன் பிடி அமைச்சின் மாகாண மீன்பிடிப்  பிரிவினால் இந்த தடாக மீன் வளர்ப்பு திட்டத்துக்கு தொழில்நுட்ப ஆலேசனை,  மீன் குஞ்சுகள், தடாகத்தை மறைப்பதற்கான வசதிகள் என்பன உதவிகளாக  வழங்கப்பட்டு வருகின்றன.  

இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுக்காமுனை பிரதேசத்தில்  மீன்குஞ்சு உற்பத்தி தொழிற்சாலையொன்று நிறுவப்பட்டு அதன் மூலம்  மீன்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கான வாகன ஒழுங்குகளும்  செய்யப்பட்டுள்ளன.  

நன்னீர் மீன்வளர்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்  தடாக மீன்வளர்ப்பு திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13பிரதேசங்களில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின்  மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட்டு வரும் தடாக மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் காங்கேயனோடை  பிரதேசத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரின் மீன் பண்ணையில் வளர்க்கப்பட்ட  மீன்களின் அறுவடை அண்மையில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய மற்றும் மீன்பிடி  அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, மாகாண மீன்பிடி பிரிவின்  பணிப்பாளர் எஸ்.சுதாகரன், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி  சத்தியானந்தி நமசிவாயம், மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர்  டி.தயானந்தன், மீன்பிடி பிரிவின் மாவட்ட உத்தியோகத்தர் எல்.பிரதீபன்,  மண்முனைப் பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் மற்றும் மண்முனைப்  பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண மீன்பிடி பிரிவின் அதிகாரிகள் என  பலரும் கலந்து கொண்டனர்.  

இதன் போது அஷ்ரப் மீன் பண்னையில் வளர்க்கப்பட்ட மீன்கள்  அறுவடை செய்யப்பட்டதுடன் விற்பனை நடடிவக்கையும் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்படி  பண்ணையாளரான அஷ்ரப் என்பவருக்கு மாகாண மீன்பிடி பிரிவினால் 5000  மீன்குஞ்சுகள் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன் அவருடைய முயற்சியாலும் 15000  மீன்குஞ்சுகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இந்த தடாகத்தில்  விடப்பட்டு நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் அறுவடை நடைபெற்றது.  

இதன் மூலம் ஒரு மீன் 750கிராமுக்கும் குறைவில்லாத வகையில்  காணப்படுவதுடன் பெரும் உற்பத்தியை இது ஏற்படுத்தியுள்ளது. இங்கு உற்பத்தி  செய்யப்படும் இந்த மீன்கள் ஒரு கிலோ 300ரூபாவுக்கு விற்பனை  செய்யப்படுகின்றன.  

உள்ளூர் மட்டத்திலும் நன்னீர் மீனுக்கான தேவை அதிகம்  காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த தடாக மீன் வளர்ப்பு என்பது சிறந்த ஒரு  வாழ்வாதார தொழில் முயற்சியாகும்.  

எம்.எஸ்.எம்.நூர்தீன்
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)     


Add new comment

Or log in with...