பண்டைய இந்துக்களின் பெருமை கூறும் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரம் ஆலயம் | தினகரன்

பண்டைய இந்துக்களின் பெருமை கூறும் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரம் ஆலயம்

இலங்கையைச் 'சிவபூமி' என்றார் திருமூலர். சீதா பிராட்டியைத் தேடி ஆஞ்சநேயர் ஆகாய மார்க்கமாக இலங்கைக்குப் புறப்பட்ட போது, இலங்கை மண்ணில் கால் பதிக்கையில் அவதானமாக இருக்கும்படியும். ஏனெனில் அம்மண்ணில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் இராமபிரான் கூறியதாக கூறப்பட்டுள்ளது. 

சிவபக்தனான இராவணன் ஆறா யிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து ஆட்சி செய்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. இவ்வாறு சிவவழிபாட்டுடன் தொடர்புபட்ட பண்டைய வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது இலங்கைத் தீவு.

இத்தீவின் வடமுனையில் யாழ்ப்பாணத்தில் நகுலேஸ்வரமும், தென்முனையில் தேவேந்திரமுனையில் தொண்டீஸ்வரமும், கிழக்கில் கோணேஸ்வரமும், மேற்கில் முன்னேஸ்வரம், கேதீஸ்வரம் ஆகியவையும் அமைந்துள்ளன.

விஜயன் இலங்கையில் கரையொதுங்கியது கி.மு. 543இல் ஆகும். அதாவது இற்றைக்கு 2564ஆம் ஆண்டுகளுக்கு முன்னராகும். விஜயனுடன் இலங்கைத்தீவில் கரையொதுங்கியவர்களில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனும் இருந்ததாகவும் அவன் மேற்குறிப்பிட்ட ஐந்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டதாகவும், அவ்வைந்து சிவாலயங்களையுமே இந்துக்கள் இன்று பஞ்சேஸ்வரங்களென்று குறிப்பிடுகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்படி சிவாலயங்கள் மட்டுமல்ல, தோன்றிய காலம் குறிப்பிட முடியாத பல சிவாலயங்களும் இத்தீவில் உள்ளன. இவற்றை நோக்குமிடத்து வரலாற்றுத் தொன்மையை மதிப்பிட முடியாத சிவபெருமான் திருக்கோயில்கள் இத்தீவில் இருந்தமையும், சிவவழிபாடு நிகழ்ந்தமையும் உறுதியாகின்றது.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரத்திற்கும், திருக்கோணேஸ்வரத்திற்கும் அதேபோல் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரத்திற்கும் மத்தியிலேயும், நகுலேஸ்வரத்திற்கு தெற்கேயும் இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ளது பழம்பெரும் சிவாலயமான உருத்திரபுரீஸ்வரம் சிவாலயம். இவ்வாலயம் கிளிநொச்சி நகரை அண்டியதாகவுள்ளது.

ஒரு இந்து ஆலயத்தின் முக்கிய அம்சங்களான மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன இவ்வாலயத்திலுள்ளன. சிவபிரானை மூர்த்தியாகக் கொண்ட இவ்வாலயத்தின் தலவிருட்சமாகப் புளியமரமும், தீர்த்தமாக உருத்திர பெருங்குளமென்று அழைக்கப்பட்ட சிவன் கோயில் குளமும் உள்ளன.

சதுர வடிவிலான பல நூற்றாண்டுகள் பழைமையான ஆவுடையாரைக் கொண்ட இவ்வாலயம் 16ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் ஆக்கிரமிப்பு செய்த போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இலங்கைக்குள் புகுந்த போர்த்துக்கேயர் பஞ்சேஸ்வரங்களென்ற ஐந்து சிவாலயங்களை மட்டுமல்ல, தீவு எங்குமிருந்த பல இந்து ஆலயங்களையும் சிதைத்தழித்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி கோயில், இரத்மலானை நந்தீஸ்வரம், காலி மீனாட்சி சுந்தரேஸ்வரம், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரம் என்று பட்டியல் நீளுகின்றது.

ஐரோப்பியரின் படையெடுப்புகளின் தாக்கத்தால் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரம் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயருக்கு எதிராக நடத்திய யுத்தத்தின் தாக்கமும், அதேபோல் போர்த்துக்கேயருக்கும் அடுத்து ஒல்லாந்தருக்கும் அதன் பின் ஆங்கிலேயருக்கும் எதிராக வன்னி சிற்றரசு  நடத்திய யுத்தங்களின் தாக்கமும் அக்காலத்தில் இப்பகுதியில் அதாவது கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பெருநிலப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அப்பகுதியை விட்டு இடம்பெயரக் காரணமாக அமைந்தன.

இதனால் அப்பிரதேசத்திலிருந்த ஆலயங்கள் பராமரிப்பின்றி கைவிடப்பட்டன.

கொழும்பு தொல்பொருட்காட்சியகத்தில் 1976ஆம் ஆண்டளவில் காணப்பட்ட நடராஜர் திருவுருவச் சிலையொன்றில் இச்சிலை கி.மு. 2ஆம் நூற்றாண்டு காலத்திற்குரியதென்றும் அது கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளவிலிருந்து கண்டெடுக்கப்பட்டதென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த சிலை 1980களில் அகற்றி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் கி.மு. நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் இருந்ததென்பது வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தக்கூடியதாயுள்ளது.

அழிவுற்ற நிலையிலிருந்த இச்சிவாலய இடிபாடுகள் கி.பி. 1882செப்டெம்பர் மாதம் 02ஆம் நாள் அன்றைய பிரித்தானியர் கால யாழ்ப்பாண அரசாங்க அதிபரால் கண்டுபிடிக்கப்பட்டு, இந்து மக்கள் மத்தியிலே வெளிக்கொணரப்பட்டது.

உருத்திரபுரக்குளத்தின் அருகாமைக் காட்டில் இவ்வழிவுற்ற சிவாலயமானது பொதுமக்கள் உதவியுடன் அவரால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதுடன் இவ்வாலய வரலாறும் வெளிக்கொண்டு வரப்பட்டது.

இலங்கைத் தீவில் வரலாற்றுப் பழைமை கொண்ட சிவாலயங்களில் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரமும் ஒன்று. இச்சிவாலயமானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்பிரதேச தமிழ் இந்து மக்களின் இருப்பையும் பழைமையையும், சிறப்பையும் வெளிப்படுத்தும் வரலாற்றுச் சான்றாகவுள்ளது. ஒரு சமூகத்தின் வரலாற்று ஆதாரமாக இருப்பவற்றில் முக்கியமானது அவர்களது வழிபாட்டுத் தலங்களாகும்.

அந்த உண்மையையுணர்ந்து இந்துக்கள் தமது வழிபாட்டுத் தலங்களின் வராற்றைப் பேணுவது அவசியமானதாகும். தற்போது புனருத்தாபனம் செய்யப்பட்டுள்ள இச்சிவாலயத்தில் நித்திய பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று வருவது பெருமைக்குரியது.    

த. மனோகரன்


Add new comment

Or log in with...