அவலத்தில் வாடும் மக்களுக்காக பணிபுரியும் ரிஹானா ரவூப் ஜெஸ்மின்

'இன்று மூஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கணவன்,- மனைவிக்கு இடையில் சரியான புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பொறுமை இல்லாததன் காரணமாக பல குடும்பங்களில் தகராறுகள் நிலவி நீதிமன்றம் வரை விவகாரம் செல்கின்றது. இப்பிரச்சினை ஈற்றில் விவாகரத்து வரை சென்று குடும்பங்கள் சின்னாபின்னப்படும் அவலம் அதிகரித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்' என்று சமூகப் பணிகள் மற்றும் உளவியல் துறையில் சேவையாற்றும் பேருவளை ரிஹானா பவுண்டேசன் ஸ்தாபகர் ரிஹானா ரவ்ப் ஜெஸ்மின் கூறினார்.

'குடும்ப வண்டிச் சக்கரங்கள் இரண்டும் சரிசமமாக இயங்குவதில் கணவன், மனைவிக்கு இடையே சரியான புரிந்துணர்வு இருக்க வேண்டும். இது தவறும் பட்சத்திலேயே தகராறு வலுக்க ஆரம்பிக்கிறது.

இத்தவறு முளையிலேயே கிள்ளப்படுமானால் றிலைமை சீராகி விடும். ஒவ்வொரு குடும்பத் தலைவன், தலைவியும் குடும்ப விவகாரங்களில் சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற குணங்களைப் பேணி நடந்தால் பிரச்சினை, சிக்கல்களுக்கு இடம் இருக்காது' என்றும் அவர் தெரிவித்தார்.

இவர் பேருவளையில் இயங்கி வரும் காதிநீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு முதல், தம்பதியினருக்கு உளவியல் ஆலோசனை வழங்குனராக செயற்பட்டு வருகிறார். இதே காலப் பிரிவில் கொழும்பிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் இணைந்து எல்.எல்.பீ சட்டத்துறையையும் பூர்த்தி செய்துள்ளார். தனது ஏழு வயதில் தந்தையை இழந்து தனது சகோதரர்கள் ஒத்துழைப்புடன் கல்வித் துறையில் இத்தகைய உயர்வை அடைந்துள்ளதாக கூறும் இவர், 2008ஆம் ஆண்டு பேருவளையச் சேர்ந்த முகம்மது ஜெஸ்மி என்பவரை திருமணம் செய்தார்.

தனது நற்பணிகளுக்கு கணவர் பூரண ஒத்துழைப்பு வழங்கியதால் பொதுநலத் தொண்டில் மேலும் உத்வேகத்துடன் ஈடுபடுவதாக அவர் கூறுகிறார்.

தனது வருமானத்தின் ஒரு பகுதியை பொதுநலப் பணிகளுக்காக செலவு செய்து வருவதாக ரிஹானா ரவ்ப் ஜெஸ்மின் கூறுகிறார். விதவைப் பெண்கள் சுயதொழிலில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறார்.

தையலில் நன்கு பரிச்சயமுள்ள குறிப்பிட்ட சிலருக்கு ஜூகி தையல் இயந்திரங்களையும் வழங்கி அவர்களுக்கு கூடுதலான வருமானம் ஈட்டிக் கொள்ளும் வழிகளையும் செய்துள்ளார்.

பல்வேறு வழிகளிலும் வறிய குடும்பங்களுக்கு தனது நிறுவனத்தின் ஊடாக நிதிஉதவி வழங்கி வருகிறார். சில குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக நிதியுதவி செய்தும் வருகிறார். இவர் தனது மாவட்டத்தில் பல இடங்களிலும் மற்றும் சில உளவியல் வளவாளர்களுடன் இணைந்து இலவச உளவியல் முகாம்கள், செயலமர்வுகளை நடத்தி வருகிறார்.

அனாதை இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு இலவசமாகவே உளவியல் சிகிச்சை செய்து வருகிறார். இதே போன்று தான் கற்ற சட்டத்துறையையும் இலவச சட்ட ஆலோசனை வழங்குவதில் அர்ப்பணித்து வருவதும் இவரிடம் காணப்படும் மற்றொரு சிறப்பம்சமாகும்.

சுனாமிப் பேரலை அனர்த்தத்தின் போது பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை, தர்காநகர் உள்ளிட்ட பகுதி வன்செயல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தங்களின் போதும் இவரது நிறுவனம் நிவாரணங்கள் வழங்குவதில் துரிதமாக செயல்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் போது பல கிராமங்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இந்நிறுவனத்தால் உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பேருவளை பீ.எம். முக்தார்


Add new comment

Or log in with...