பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈரான் ஆக்கபூர்வ நடவடிக்கை

ஜனாதிபதி ஹசன் ரூஹானி

‘பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கு எதிரான போராட்டத்தில் நாம் மிகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’ என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் மத்திய வங்கியின் வருடாந்த பொதுச்சபையின் 60 வது அமர்வில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்தார்.

“2015 முதல் 2017 வரை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குதல், பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த நாட்டின் புள்ளிவிபரங்கள் சிறந்தவை. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு பருவத்திலும் நாட்டில் 700,000 இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. பணவீக்கத்தை ஒற்றை இலக்கமாக குறைத்துள்ளோம். 2016 ஆம் ஆண்டில் ஈரானின் பொருளாதார வளர்ச்சி உலகின் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியாக இருந்தது. இது ஒரு பெரிய சாதனையாகும்” என்றும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

“நாங்கள் ஒரு முழுமையான பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ளோம். பொருளாதார வல்லுநர்கள் முன்னோடியில்லாத அழுத்தங்கள் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரத் தடைகள் காரணமாக, நாட்டில் பணவீக்கம் மூன்று இலக்கங்களை எட்டும் என்று 2018 இற்கு முன்னர் கணித்திருந்தனர். இந்நிலைமையை நிர்வகிக்க நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மூன்று இலக்க பணவீக்கத்தை நாங்கள் கண்டிருப்போம். 2019 ஆம் ஆண்டில், பணவீக்க வீதம் குறைந்து கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த ஆண்டின் இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்ற புதிய நெருக்கடியை எதிர்கொண்டோம்.

ஈரானுக்கு எதிரான முன்னோடியில்லாத பொருளாதாரத் தடைகள் மற்றும் முழு அளவிலான பொருளாதாரப் போரை வடிவமைத்தவர்கள், ஈரானியப் பொருளாதாரத்தின் சரிவை நோக்கமாகக் கொண்டே அதை செய்தனர். ஈரானிய மக்களுக்கு அழுத்தம் கொடுக்கவென ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இன்று, பொருளாதார பயங்கரவாதம் தொடங்கி மூன்று வருடங்கள் கடந்தும், நாட்டின் பொருளாதாரம் இன்னும் வலுவாகவே உள்ளது. யுத்த சூழ்நிலைகளில் மேலாண்மை மிகவும் சிக்கலானதும் கடினமானதுமாகும். திணிக்கப்பட்ட போரின் போது எனக்கு நிர்வாக வரலாற்று அனுபவம் உள்ளது. இப்பொருளாதாரப் போரில் நான் இமாமினால் பொருளாதாரப் போரின் தளபதியாக நியமிக்கப்பட்டேன். இதன்போது பெற்றுக் கொண்ட அனுபவம் அளப்பரியது. இதற்காக நாட்டின் பொருளாதார அதிகாரிகளான அனைத்து முன்னணி வரிசை நிபுணர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றும் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்தார்.

“பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்து அரசாங்கம் 4 மசோதாக்களை சமர்ப்பித்தது. அவை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு கார்டியன் கவுன்சிலின் ஆட்சேபனைகள் தீர்க்கப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றன. பிராந்தியத்தில் ஊழல், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான உண்மையான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் ஈரான், பொதுமக்களின் கருத்துக்களை நன்கு தெரிவிக்கத் தவறி விட்டது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

(ஈரான் மாணவர் செய்தி முகவரகம்)


Add new comment

Or log in with...