களுத்துறை மாவட்டத்தின் கல்விக்கான புதிய ஆரம்பம் | தினகரன்

களுத்துறை மாவட்டத்தின் கல்விக்கான புதிய ஆரம்பம்

தரம் 1 வகுப்பு மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள்

'களுத்துறை மாவட்டத்தின் கல்விக்கான புதிய ஆரம்பம்' வேலைத் திட்டத்தின் பிரகாரம் களுத்துறை கல்வி வலயத்தின் பாணந்துறை கோட்டக் கல்விப் பிரிவின் பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்ட முதலாம் தரம் -(2021) மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணம் வழங்கும் பிரதேச மட்ட அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பாணந்துறையில் நடைபெற்றது.

பாணந்துறை பிரிவுக்கான முதலாம் கட்ட நிகழ்வு பல்வேறு பாடசாலைகளையும் மையமாகக் கொண்டு பல பிரதேசங்களிலும் இடம்பெற்றது. களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தவின் 'களுத்துறை மாவட்டத்தின் கல்விக்கான புதிய ஆரம்பம்' என்ற எண்ணக் கருவின் பிரகாரம் 'மாணவர் பிள்ளைகள் யாத்திரை' என்ற வேலைத் திட்டத்தின் கீழ் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேற்படி கல்வி ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு அனுமதி பெற்ற இருபதாயிரம் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி பாணந்துறை கோட்டக் கல்விப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் ஆயிரம் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் அன்பளிப்பு நிகழ்வுகள் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி உள்ளிட்ட மற்றும் பாடசாலைகளிலும் இடம்பெற்றன.

பாணந்துறை ஹேனமுல்ல ஜீலான் மத்திய கல்லூரியின் உம்முல் மலீஹா ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் அதிபர் ஹலீம் மஜீத் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககே, பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சரித ருபேரு, மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.அதிபர் ஹலீம் மஜீத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

"எமது பிள்ளைகளுக்கான ஆரம்ப மொழி மற்றும் ஆற்றல் தகைமைகளைப் பெற்றுக் கொடுப்பதும் உடல், மன, சிந்தனை, ஆக்கம், பண்பாடுஉள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் காரணிகளின் விருத்திக்கு அத்திவாரமிடுவதும் ஆரம்பக் கல்வியின் பிரதான இலக்குகளாகும். பிள்ளையின் பிறப்பு தொடக்கம் எட்டு வயது வரையான காலப் பகுதியில் மூளை, அறிவு உடல் மற்றும் செயல்பாடுகள் துரிதமாக வளர்ச்சியடையும்.இந்த தீர்மானமிக்க காலப் பகுதியின் மூன்றாண்டுகள் பிள்ளையின் ஆரம்ப பாடசாலை யுகத்துக்கு உட்பட்டதாகும்" என அமைச்சர் அங்கு தெரிவித்தார். பாணந்துறை பிரிவுக்கான கற்றல் உபகரண அன்பளிப்பு நிகழ்வுகள் பலவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு நல்கி எதிர்காலத்தை ஒளிமயமானதாக்குவதற்கு பங்களிப்புச் செய்யக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.முன்தஸிர்

பாணந்துறை மத்திய குறூப் நிருபர்

 


Add new comment

Or log in with...