தேர்தல் என்பது முடிவல்ல; மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது

தேர்தல் என்பது முடிவல்ல, மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளதாவது,..

இந்த இக்கட்டான சூழலிலும் 72% வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

அரசியலாளர்களின் பொறுப்பைக் கூட்டுகிறது. தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.

இந்தத் தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்தத் தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்று முன்னகர்ந்திருக்கிறோம். 'மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை' என்பது அதில் முதன்மையானது.

தமிழகத்தைச் சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம்.


Add new comment

Or log in with...