அன்றாட உணவுப் பழக்கங்கள் மூலம் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பு

-  'சுபீட்சத்தை நோக்கிய பயணம்'  

ஜனாதிபதியின் 'சுபீட்சத்தை நோக்கிய பயணம் -2021' தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், கொவிட் 19மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பும் பெறும வழிமுறைகள், ஆரோக்கிய வாழ்வை கட்டியெழுப்புதல் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகின்றது. 

சுதேசிய வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை  அபிவிருத்தி, சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன், நிந்தவூர்  அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை (தொற்றா நோய் சிகிச்சை) பதில்  பணிப்பாளர் ​ெடாக்டர் கே.எல்.எம்.நக்பர் இவ்வேலைத் திட்டத்தை சிறப்பாக  முன்னெடுத்து வருகின்றார். 

இவ்வேலைத் திட்டத்தின் கீழ், அரச உத்தியோகத்தர்களுக்கு ஆரோக்கிய வாழ்வைக் கட்டியெழுப்புதல் தொடர்பான செயலமர்வுகளும், பாடசாலை மாணவர்களுக்கு நஞ்சற்ற உணவுப் பழக்கங்கள், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள், கொரோனா மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழிமுறைகள் தொடர்பிலும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

தற்காலத்தில் மனித வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டது. நவீன விஞ்ஞானம் உச்சத்தில் வளர்ச்சியடைந்த போதிலும், மனித ஆரோக்கியம் தினசரி  பாதிப்படைந்து கொண்டே செல்கின்றது எனலாம். மருந்தின்றி வாழ முடியாது என்ற நிலையாகி விட்டது. இதற்கு முறையற்ற உணவுப் பழக்கம், முறையான  உடற்பயிற்சியின்மை, உடல், உள ஆரோக்கியமின்மை போன்ற இன்னோரன்ன விடயங்கள் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. 

இவ்விடயம் தொடர்பில், நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை தொற்றா நோய் சிகிச்சை) பதில் பணிப்பாளர் ​ெடாக்டர் கே.எல்.எம்.நக்பர் கூறுகையில், "மரணத்தை ஏற்படுத்தும் தொற்றா நோய்களிலிருந்து நாங்கள் முறையான பாதுகாப்புப் பெறவேண்டும். எங்களது அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் அதிகம் கவனம் செலுத்தி, நோய்களிலிருந்து முற்பாதுகாப்புப் பெறுவது அவசியமாகும். தற்காலத்தில் மக்களை அதிகம் தாக்கிவரும் தொற்றா நோய்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நீரிழிவு, அதிகுருதி அழுத்தம், அதிக குருதிக் கொழுப்பு, இருதயநோய், அதிக உடற் பருமன் என்பனவற்றினால் மக்கள் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

தொற்றா நோய்கள் ஏற்படாது தடுக்க வேண்டிய பொறுப்பு தனிப்பட்ட ரீதியில்  ஒவ்வொருவருக்கும் உண்டு. இலங்கையின் மொத்த சுகாதார செலவில் சுமார் 85  வீதமான செலவு தொற்றா நோய்களின் கட்டுப்பாடு, சிகிச்சைக்காக  செலவிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்று அரச மற்றும் தனியார் 

வைத்தியசாலைகள் தொற்றா நோயாளர்களினால் நிரம்பி வழிவதை அவதானிக்கக்  கூடியதாக உள்ளது. தொற்றா நோய் எங்களைப் பீடிப்பதற்கு தினசரி முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களே பிரதான காரணமாகும்.  

ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவது நோய்க்கு பிரதான காரணமாகும். அது மாத்திரமன்றி நஞ்சு, எண்ணெய், கொழுப்பு படிந்த உணவுகளில் நாங்கள் அதிகம் நாட்டம் செலுத்துவதும் காரணமாகும். இயற்கை பழச்சாறுகளை அருந்தாது, இரசாயனம் கலந்த செயற்கைகளிலயே அதிகம் நாட்டம் காட்டுகின்றோம். தினசரி உணவில் மரக்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுமாறும், அதிகளவு நீர் அருந்துமாறும் வைத்தியர்கள் எங்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ள 

போதிலும், அவற்றை நாங்கள் உதாசீனம் செய்து மனம் போன போக்கில் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம். இதனால், தொற்றா நோயினால் பீடிக்கப்படுவது  மாத்திரமன்றி, அது குடும்பத்திலுள்ள ஏனையவர்களுக்கும் சிரமங்களை  ஏற்படுத்துவதாக அமைந்து விடுகின்றது. 

தொற்றா நோய்கள் உச்சத்தை அடையும் போது நாங்கள் வெளியில் நடமாட முடியாது வீட்டில் முற்றாக முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எற்படுகின்றது. இதனால் நாங்கள் மாத்திரமன்றி, எங்களின் நெருக்கமான உறவுகளும் அதிகம் சிரமங்களை எதிர்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். இது  காலப்போக்கில் நாங்கள் குடும்பத்தினர்களிடமிருந்து தூரமாகுவதற்கு  காரணமாகவும் அமைந்து விடுகின்றது. 

இவ்விடயங்களில் அலட்சியம் செய்பவர்கள் பின்னர் தவிக்க நேரிடலாம். வந்தபின் அவதியுறுவதை விடவும், வருமுன் காப்பதே சிறந்ததாகும். நாங்கள்   முறையான சுகாதார நடைமுறைகள், பழக்க வழக்கங்களைப் பேணி, தொற்றா நோய்களின் தாக்கத்திலிருந்து நிறைவான பாதுகாப்புப் பெற வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டே நாம் விஷேட விழிப்புணர்வு வேலைத் திட்டத்தை  முன்னெடுத்து வருகின்றோம். எமது பணிக்கு அரச அலுவலகங்கள், பாடசாலைகளில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது" என்றார். 

அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தனித்தனியான செயலமர்வுகளை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், அதில் பொருத்தமானவர்களை பங்குபற்றச் செய்யுமாறும் ​ெடாக்டர் நக்பர் பிரதேச செயலாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களை கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   தொற்றா நோய் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்குகள், இலவச நீரிழிவு  நோய்க்கான இரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை என்பனவற்றை  நிந்தவூர் அரசாங்க ஆயர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை (தொற்றா நோய் சிகிச்சை) இலவசமாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முகம்மட் றிஸான்
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...