புதுமுக இயக்குனராய் மிளிரும் சிந்துஜா செபஸ்டியன் | தினகரன்

புதுமுக இயக்குனராய் மிளிரும் சிந்துஜா செபஸ்டியன்

நாம் வாழுகின்ற சூழல் எப்போதும் விசித்திரம் மிகுந்தது. அந்த சூழல் எம் மண்ணில் பல ஆளுமைகளை இயல்பாக உருவாக்கியிருக்கின்றது. இன்னமும் உருவாக்கிக் கொண்டேயும் இருக்கின்றது. இப்படியான வெளியில் அண்மிய நாட்களாய் ஈழத்து திரைத்துறை சார்ந்து இயங்கிக் கொண்டு தன்னை இயக்குனர் தளத்தில் நிலையிறுத்தியிருப்பவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் படைப்பாளி சிந்துஜா செபஸ்ரியன் குரூஸ்.

அண்மையில் கொழும்பில் நட்சத்திரக் கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு குறும்பட போட்டியில் சிறந்த இயக்குனருக்கான இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டவரும் இவரேயாவார்.

The noise of the dump அதாவது ஊமையின் பாஷை என்ற தலைப்பில் இவர் தனது குறும்படத்தை வெளியிட்டு விருதும் பெற்றிருக்கிறார்.

திறந்த பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து வரும் சிந்துஜா சிறு வயது முதலே பாடசாலைக் காலங்களில் பேச்சு, நாடகம், புகைப்படம் போன்ற கலைத்துறை சார் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

தனது சகோதரியான தேனுஜாவின் ஒத்தாசையுடனேயே இந்தக் கலைத்துறை முயற்சிகளில் தான் ஈடுபடுவதாகவும், தன் குடும்பத்தினரின் பாரிய ஊக்குவிப்பும் தன்னை இந்தத் துறையில் தொடர்ச்சியாக பயணிக்க வழி வகுக்கிறதாகவும் கூறினார்.

தனது சகோதரி நன்றாக சிறுகதை எழுதக்கூடியதால் இத்துறை சார்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது என்றும் கூறுகிறார் சிந்துஜா.

திரைத்துறை சார்ந்து எந்தவிதமான அனுபவங்களும் வேறு புரிதல்களும் இல்லாத போதும் தனது ஆர்வத்தால் இந்தத் துறைக்குள் வந்ததாக கூறும் சிந்துஜா, 'ஊமையின் பாஷை' என்ற இக்குறும்படம் இயக்குனரும் கலைஞருமான ராஜ் சிவராஜின் மிகப்பெரிய ஒத்தாசையாலேயே நிறைவேறியதாகவும் கூடவே கலை இயக்குனராக பணியாற்றிய சரவணன் மற்றும் படத்தில் நடித்த விதுனா தயா நேசன் ஆகியோரினதும் பங்களிப்புக்களையும் மறக்க முடியாது என நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

திரைத்துறையைப் பொறுத்தமட்டில் சிந்துஜா செபஸ்டியன் குரூஸ் புதுமுகமானவராக இருந்தாலும் ஆரம்பத்திலேயே மகளிர் தின சிறப்பு குறும்பட போட்டியில் இயக்குனருக்கான இரண்டாம் இடத்தை வென்றமை அவருக்கு ஊக்குவிப்பாக அமைகிறது எனலாம்.

தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வரும் சிந்துஜா செபஸ்டியன் யாழிலிருந்து பிரம்மாண்டமாக உருவாகிவரும் பூவன் மீடியாவில் 'புத்தி கெட்ட மனிதரெல்லாம்' என்ற முழு நீளத் திரைப்படத்தைலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

திரைத்துறை சார்ந்து இன்னும் பல பெண் படைப்பாளிகள் இயங்கி வருகின்ற இன்றைய சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் பல பெண் படைப்பாளிகள் வரிசையில் சிந்துஜா செபஸ்டியன் இணைந்து இன்னும் பல படைப்புக்களைத் தர வேண்டும்.

தொகுத்து எழுதுபவர்
வெற்றி துஷ்யந்தன்


Add new comment

Or log in with...