பேக்கரி, பிஸ்கட் கைத்தொழிலுக்கான பாம் ஒயிலை பெற அனுமதிப்பத்திரம்

பேக்கரி, பிஸ்கட் கைத்தொழிலுக்கான பாம் ஒயிலை பெற அனுமதிப்பத்திரம்-Special License to Import Palm Oil for Biscuit-Bakery Production

பேக்கரி மற்றும் பிஸ்கட் கைத்தொழில் தயாரிப்புகளுக்குத் தேவையான பாம் ஒயிலை (Palm Oil) எவ்வித தட்டுப்பாடுமின்றி இறக்குமதி செய்ய விசேட அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனவே, பாம் ஒயில் இறக்குமதியை தடை செய்ய எடுக்கப்பட்ட முடிவு காரணமாக, அது தொடர்பான கைத்தொழில்கள் பாதிக்கப்படாதென, அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

முள் தேங்காய் செய்கை மற்றும் பாம் ஒயில் இறக்குமதியை ஜனாதிபதி தடை செய்துள்ளார். அதன்படி, பேக்கரி கைத்தொழிலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது எனும் சித்தாந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. அது அநீதியான விடயமாகும். பிஸ்கட் கைத்தொழில் மற்றும் பேக்கரி கைத்தொழிலுக்கு அவசியமான பாம் ஒயிலை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அவற்றின் உற்பத்திக்கான மூலப்பொருள் என்ற வகையில் பாம் ஒயிலை எவ்வித பற்றாக்குறையும் இன்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றார்.

அத்துடன், பாம் ஒயிலை இறக்குமதி செய்ய விரும்பும் எவரும், நிதி அமைச்சின் செயலாளரிடம் தங்களது முறையீட்டை மேற்கொள்ளலாம்.

இதன்போது, கேள்வியொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சத்தி எம்.பி. குமார வெல்கம, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாம் ஒயிலுக்கு அனுமதி வழங்கப்படுமா என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, அரசாங்கம் என்ற வகையில், நாட்டின் உற்பத்தியை சீர்குலைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது எனத் தெரிவித்தார்.

நாட்டில், உரிய தரத்திற்கு ஏற்ப பாம் ஒயில் தயாரிக்கப்படுமாயின், அதை சந்தையில் விநியோகிக்க எந்தவொரு தடையும் இல்லை என்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் இறக்குமதி தடை செய்யப்படுவதாக, நேற்றுமுன்தினம் (05) ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்திருந்து ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...