3 மாதங்கள் அவைக்கு வராததால் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. பதவி இழப்பு

3 மாதங்கள் அவைக்கு வராததால் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. பதவி இழப்பு-Ranjan Ramanayake's MP Seat Vacated

- தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பு
- அவைக்கு அறிவித்தார் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன
- அவையில் எதிர்க்கட்சியினர் சலனமும் இன்றி அமர்வு

கம்பஹா மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்றைய (07) பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு,

"சட்ட ஆலோசனையை கருத்தில் கொண்டும், அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கமைய, 1981 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 64(1) இற்கு அமைய, 9ஆவது பாராளுமன்றத்தின், கம்பஹா தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஏ. ரஞ்சன் லியோ சில்வஸ்டர் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையானது, அரசியலமைப்பின் 66 (D) இற்கு அமைய வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது."

இவ்வறிவிப்பை சபாநாயகர் வெளியிட்ட போதிலும், சபையில் எதிர்க்கட்சியினர் எவ்வித சலனமும் இன்றி அமைதியாக இருந்தனர்.

நேற்றையதினம் (06), ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுமுறை வழங்கும் கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த போது பாரிய கூச்சல் குழப்பங்கள், வாத பிரதிவிவாதங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, கடந்த ஜனவரி மாதம், 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கடந்த 3 மாதங்களாக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாத நிலையைத் தொடர்ந்து, அவரது எம்.பி பதவி இவ்வாறு செயலற்று போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...