ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை கைவிட LG முடிவு | தினகரன்

ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை கைவிட LG முடிவு

இழப்பை சந்தித்திருக்கும் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை கைவிடப்போவதாக எல்.ஜி எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் மொத்தம் 4.5 பில்லியன் டொலர்கள் இழப்புகளை சந்தித்திருக்கும் நிலையில் மாற்றாக அனைத்து தேர்வுகள் பற்றியும் அவதானம் செலுத்தி இருப்பதாக தென் கொரியாவைச் சேர்ந்த அந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் குறிப்பிட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டு மூன்றாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்த எல்.ஜி, அல்ட்ரா வைட் ஆங்கிள் கெமார உட்பட புதிய புத்தாக்கங்களையும் அறிமுகம் செய்தது.

எனினும் கைபேசி சந்தை அதிக போட்டி நிரம்பியதாக உள்ளது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஸ்மார்ட்போர்ன் சந்தையில் முதல் இரு இடங்களை பிடித்திருக்கும் நிலையில் எல்.ஜி வன்பொருள் மற்றும் மென்பொருள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

வட அமெரிக்காவில் தொடர்ந்து மூன்றாவது பிரபல கைபேசியாக எல்.ஜி இருந்தபோதும் ஏனைய சந்தைகளில் அது பின்னடைவை சந்தித்துள்ளது.

வீட்டு உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுடன் நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் வணிகத்தில், எல்.ஜி நிறுவனம் இன்னமும் வலுவான பங்களிப்பை கொண்டுள்ளது. சாம்சுங்கிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பு நிறுவனமாக எல்.ஜி விளங்குகிறது.

மேக்னா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் எல்.ஜி நிறுவனம் அறிவித்திருந்தது.

கடுமையான போட்டித்தன்மையுள்ள திறன்பேசிச் சந்தையிலிருந்து வெளியேறினாலும், வளர்ச்சி காணும் தனது மற்ற பிரிவுகளில் கவனம் செலுத்தப்போவதாக எல்.ஜி தெரிவித்தது.

எல்.ஜியின் திறன்பேசி தயாரிப்பு தொழிலை விற்கும் முடிவு தொடருவதாகவும், எனினும் ஏற்கனவே விற்பனையான திறன்பேசிகளுக்கான வாடிக்கையாளர் சேவைகளும், புதிய மென்பொருள் பதிப்புகளும் தடையின்றி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...