இந்தியாவில் கொரோனா மீண்டும் உச்சம்; புதிய தொற்று ஒரு இலட்சத்தை தாண்டியது | தினகரன்

இந்தியாவில் கொரோனா மீண்டும் உச்சம்; புதிய தொற்று ஒரு இலட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்டக் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,89,067ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ம் தேதிக்கு பிறகு புதிய தொற்று உச்சத்தை அடைந்துள்ளது.

அத்துடன் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்த 2வது நாடு என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவில் தினசரி பாதிப்பு ஒரு இலட்சத்தை தாண்டி பதிவானது.

நேற்று ஒரே நாளில் 478 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,65,101 ஆக உயர்ந்துள்ளது.


Add new comment

Or log in with...