சர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021

சர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021-Controversial Mrs Sri Lanka 2021-Crowned Removed-From the Winner Pushpika De Silva Handed Over

- முதலிடத்திற்கு தெரிவானவர் விவாகரத்து பெற்றவர் என கிரீடம் நீக்கம்
- கிரீடம் நீக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி
- மீண்டும் அவருக்கே கிரீடத்தை வழங்க முடிவு
- கிரீடத்தை நீக்கிய முன்னாள் திருமதி மீது சமூகவலைத்தளத்தில் விமர்சனம்

நேற்று (04) இரவு இடம்பெற்ற திருமதி இலங்கை 2021 (Mrs. Sri Lanka 2021) போட்டி சர்ச்சையில் நிறைவடைந்துள்ளது.

போட்டியில் 20ஆம் இலக்க போட்டியாளரான திருமதி இலங்கை 2021 வெற்றியாளர் புஷ்பிகா டி சில்வாதிருமதி புஷ்பிகா டி சில்வா, நடுவர்களால் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, பிரதமரின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க உள்ளிட்டோரின் பங்குபற்றுதலுடன், கடந்த ஆண்டு உலக திருமதியாக தெரிவு செய்யப்பட்ட கரோலின் ஜூரியினால் கிரீடம் அணிவிக்கப்பட்டு, வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், இந்த சர்ச்சை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தற்போது திருமதியாக வெற்றி பெற்றிருப்பவர் விவாகரத்து பெற்றவர் எனவும், திருமதி போட்டியில் கலந்துகொள்பவர் விவாகரத்து பெற்றிருப்பதானது, போட்டியில் பங்குபற்றுவற்கான தகுதி இழப்புக்கு ஒரு காரணம் எனவும், மேடையில் ஏறிய முன்னாள் திருமதி கரோலின் ஜூரி அறிவித்தார்.

அதற்கமைய, தற்போது இரண்டாமிடத்திற்கு தெரிவானவரே வெற்றி பெற்றுள்ளார் எனவும், அக்கிரீடம் அவருக்கே உரியது எனவும் அறிவித்தார்.

இதன்போது, நிகழ்வில் கூச்சல் ஒலிகள் ஒரு புறமும், மறு புறத்தில் கரகோச ஒலியும் எழும்பியதோடு, வெற்றியாளர்களை நோக்கிச் சென்ற, நடப்பு உலக திருமதி கரோலின் ஜூரி முதலிடத்திற்கு தெரிவான, புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்து கிரீடத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

அத்துடன், திடீரென அங்கு வந்த ச்சூலா பத்மேந்திர எனும் பெண், கிரீடத்தை வேகமாக கழற்ற முயற்சியில் ஈடுபட்ட நிலையில், கரோலின் ஜூரி அவரை அவ்வாறு செய்ய வேண்டாமென தடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சிரமத்திற்கு மத்தியில் கிரீடத்தை கழற்றிய கரோலின் ஜூரி, இரண்டாமிடத்திற்கு தெரிவான பெண்ணுக்கு அதனை அணிவித்தார். பின்னர் மூன்றவாது இடத்திற்கு தெரிவான பெண் உள்ளிட்ட மேடையில் இருந்த நால்வரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து புஷ்பிகா டி சில்வா மேடையிலிருந்து ஆவேசமாக வெளியேறிச் சென்றார்.

சர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021-Controversial Mrs Sri Lanka 2021-Crowned Removed-From the Winner Pushpika De Silva Handed Over

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு ஆதரவாக பெரும்பாலானோர் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றர்.

அத்துடன், பெண்களின் முன்னேற்றம், ஊக்குவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்து வரும் கரோலின் ஜூரி, மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், இதனை விட சிறப்பாக அதனை கையாண்டு அவ்விடயத்தை சுமுகமாக நிறைவுக்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

அத்துடன், கரோலின் ஜூரி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இவ்விடயம் தொடர்பில் சரியான தகவல்களை ஆரம்பத்தில் பெற்றிருந்தால், அல்லது அவர்கள் தொடர்பில் சரியான பின்புலத்தை ஆராய்ந்திருந்தால் அல்லது உரிய விதிமுறைகள் தொடர்பில் சரியான விளக்கத்தை போட்டியாளர்களுக்கு வழங்கியிருந்தால் இந்த சர்ச்சை போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே நிறைவுக்கு வந்திருக்கும் என கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த கிரீடத்தை கழற்ற மேற்கொண்ட முயற்சியில், குறித்த பெண்ணின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கரோலின் ஜூரியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், புஷ்பிகா டி சில்வா இன்னும் தனது கணவரிடமிருந்து முறையாக விவாகரத்து பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மேடையில் தன்னை காயப்படுத்தும் வகையில், கரோரின் ஜூரி மற்றும் ச்சூலா பத்மேந்திர நடந்து கொண்டதாக, புஷ்பிகா டி சில்வா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கிரீடத்தை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீண்டும் புஷ்பிகா டி சில்வாவிற்கே வழங்க முடிவு செய்துள்ளனர்.

திருமதி ஶ்ரீ லங்கா நிகழ்ச்சியின் தேசிய பணிப்பாளர், சந்திமால் ஜயசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், புஷ்பிக டி சில்வா சட்ட ரீதியாக விவாகரத்து பெறவில்லை எனவும், அதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றார்.

நடுவர் குழாமில் ஒருவரான கரோலின் ஜூரி, இறுதி நிகழ்வு வரை புஷ்பிகா டி சில்வா தொடர்பில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும் பின்னர் அவர் விவாகரத்து பெற்றாலும் அது அவரது தனிப்பட்ட முடிவே தவிர, தற்போது இடம்பெற்றுள்ள நிகழ்வு வரை சட்டத்தின் அடிப்படையில் அவர் விவாகரத்து ஆகாதவர் என்பதால் அவர் வெற்றியாளரே எனவும், சந்தியமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனக்கு பொது வெளியில் ஏற்பட்ட அவமானம் தொடர்பான இழப்பீடு தொடர்பில் சட்ட ரீதியில் ஆலோசனை பெற்று வருவதாக, புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.


There is 1 Comment

These types of "Anti Cultural", "Anti Traditional", "Anti Decency", "Anti Social" pageantries which are a public entertainment consisting of Sri lankan women, mothers and teenages striping nearly half of their dresses for the viewing of the elite and rich frustrated so-called "high society" in Sri Lanka has to be "banned' in our "Maathruboomiya". A way of life left behind by the colonial oppressors in the past, still practiced for the pleasure of the corrupt and unethical citizens of Sri Lanka has to be opposed by the Buddha Sasanaya and the Buddhist Maha Sangha and the "humble" Buddhist people of our "Maatruboomiya" immediately. Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart. NOTE: If "thinakaran.lk" will respect media norms, they should publish this comment, without holding it back. It is a "Right to Reply" of a Citizen of our "Mathruboomiya".

Add new comment

Or log in with...