இன்பக்கதைகள் சொல்லும் நற்றிணை பாடல்கள் | தினகரன்

இன்பக்கதைகள் சொல்லும் நற்றிணை பாடல்கள்

அனைவருக்கும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான ஆசைகள் வருகின்றது. தொட்டிலில் கிடக்கும் போது அம்மாவின் தாலாட்டை கேட்க ஆசைப்படுகிறோம் தொட்டிலை விட்டிறங்கி தளர் நடை பயிலும் போது விதவிதமான பொம்மைகள் மீது ஆசைப் பிறக்கிறது. அதன் பிறகு பம்பரம் .கோலி. கபடி என்ற தாண்டி மீசை முளைக்கும் பருவத்தில் ஆசையின் நிறம் மாறுகிறது. பம்பரம் விளையாடும் ஆசை பல் போன பிறகும் தொடர்ந்தால் எப்படி தவறோ அதே போலவே இளமைப் பருவத்தில் அறுப்பும் காதல் உணர்விற்கு தலை நரைத்து போன பிறகும் அடிமையாக கிடப்பது தவறுதல் ஆகும்   அந்த பருவத்தில் படித்த காமத்துப்பால் திருக்குறள் மனதை செம்மைப்  படுத்தியதே தவிர சஞ்சலப்படுத்தவில்லை

இரு நோக்கு அவளின் கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு மற்றொன்று அந்நோய்க்கு மருந்து என்ற குறட்பா பெண்மையின் விழியசையில் உள்ள நளினத்தை மட்டும் கற்பிக்கவில்லை பெண் மோகத்தில் உள்ள கம்பீரத்தையும் தலைக்குனிவையும் கூட கற்பித்தது.

இப்படி உணர்வுகளை மட்டும்மல்ல அக்காலத்திய சமூக சித்திரத்தையும். பழம்தமிழ் பாடல்கள் நமது கண் முன்னால் தூசி தட்டி விரித்து வைக்கிறது நற்றிணையில் உள்ள ஒரு அழகான சித்திரத்தை காண்பது நன்றாக இருக்கும்.

இளம் காதலர்கள் இருவர் ஒரு தன்னந்தனி தோப்பிற்க்குள் நடந்து வருகிறார்கள் மாலை இளம் சூரியனின் இதமான வெப்பமும்.குளிர் மிகுந்த தென்றலும் இருவர் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது அந்த சோலையில் ஒரு புன்னை மரம் நிற்கிறது அதன் அடர்ந்த நிழலில் உட்கார்ந்து இன்பக் கதைகள் பேச ஆசைப்படுகிறான் காதலன் ஆனால் வெட்கத்தோடு மறுக்கிறாள் காதல் தலைவி.

காரணம் என்னவென்று அவன் கேட்க இந்த புன்னை மரம் எனக்கு தமக்கை உறவாகும் என்று அவள் வீணை குரலில் கிசுகிசுக்கிறாள் மங்கைக்கு சகோதரி பச்சை மரமா என்று அவன் கேள்வி கேட்க துணியும் போதே அவளிடம் இருந்து பதிலும் வந்து விடுகிறது என் அம்மா குழந்தைப் பருவத்தில் இந்த சோலைக்கு வந்து தான் விளையாடுவாளாம். அப்பொழுது கேட்பாரற்று கிடந்த புன்னை மரம் விதை ஒன்றை எடுத்து மணலில் ஊன்றி வைத்தாளாம். அவள் வாலிப பருவத்தை தொட்ட போது அன்று ஊன்றிய விதை துளிர்த்து நிற்பதை கண்டாளாம் . அதன் நிழலில் தான் தோழிகளோடு விளையாடுவாளாம். அன்னை வளர்த்த மரம் என்பதால் இவளுக்கு இது அக்காவாய் ஆனதாம் இது உன் தமக்கை என்று அம்மா தான் அறிமுகம் செய்து வைத்தாளாம்.அதன் காரணமாக அக்கா முன் அத்தான் நீ தொட்டால் பற்றிக் கொள்ளாதோ  வெட்கம் மென விளக்கம் சொன்னாளாம்.  

இந்த நற்றிணை பாடலை படித்துப் பாருங்கள்

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முலை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும் என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் தும்மொடு நகையே!

இதில் என்னப்பெரிய விஷயம் இருக்கிறது ஜன்னிநோய் கண்டவன் உளறுவதுபோல காதல் நோய் வந்தவர்கள் அர்த்தமற்ற வார்த்தைகளை கூறி பிதற்றுவது வழக்கம் தானே என்று சிலர் கேட்கலாம் நானும் அப்படித்தான் ஒரு காலத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன் நேற்று வரை இல்லாத காதல் இன்று காலையில் அறும்பியவுடன் காதலனின் கருவாட்டு வால் மீசை ராஜராஜ சோழனின் கத்தி போல்இருக்கும் அவன் நாயை போல் வாலை சுருட்டிக் கொண்டு ஒடுவது கூட புலியும் சிங்கமும் கம்பீரமாக நடப்பது போல் தெரியும்

ஆண்கள் மட்டும் இழைத்தவர்களாக என்ன? அவள் காலுக்கு செருப்பு வாங்கி கொடுக்க காசு இருக்காது ஆனால் அதை வெளிக்காட்ட முடியுமா உடனே மலரே நீ நடக்க பாதையெல்லாம் பூவிரித்தேன் என்பான் குளிக்காமல் நாற்றம் அடிக்கும் அவள் வியர்வையை செந்தேன் துளி எனச் சொல்லி  நம்மை அறுவருப்பு அடைய வைப்பான் அப்படித்தான் இந்த நற்றிணை காதலியும் எதையோ சொல்ல வந்து சொல்லத் தெரியாமல் மரம் எனக்கு அக்கா என்று உளறுவதுபோல் தோன்றும்.

காதல் என்பதே ஒரு வித பைத்தியம் தான் அப்படிப்பட்ட பைத்தியக்கார பேச்சாக இந்த பாடலை நாம் எடுத்துக் கொள்ள முடியாது இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளின் பின்னனியை ஆராய்ந்தால் நமக்கு மலைப்பு ஏற்படுகிறது முதலில் காதலர்கள் நடந்துவரும் சோலையை எடுத்துக் கொள்வோம். இந்த சோலை காதலியின் அம்மா காலத்திலும் சோலையாகத்தான் இருந்திருக்கிறது இப்போதும் அப்படித்தான் இருக்கிறது இதில் நமக்கு கிடைக்கும் உண்மை பண்டைய கால தமிழன் இயற்கையை சிதைக்க முயலவில்லை அதை வளர்க்கவே விரும்பியிருக்கிறான் அதனால்தான் நாடும் நகரமும் வளமையோடு இருந்திருக்கிறது.(தொடரும்)

உ. தேவி


Add new comment

Or log in with...