தரமான படைப்பாய் வெளியாகி இருக்கும் 'தாயுமானவன்' பாடல்

வித்தியாசமான திரைசார் முயற்சிகளினூடாக தம் தம் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நம் கலைஞர்களின் கூட்டு முயற்சியினூடாக அண்மையில் வெளியாகி இருக்கும் படைப்பு 'தாயுமானவன்' பாடல்.

காணொளிப் பாடல்களிற்குள்ளேயே கதையம்சங்களை உட்செலுத்தி தரமான படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கும் நம்மவர் படைப்புக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாய் பல அம்சங்களை உள்ளிருத்தி வெளியாகும் நிலையில் ஒரு குறுந்திரைப்படத்தை அழகியல் சார் பல அம்சங்களோடு பார்த்த மாதிரியான ஓர் உணர்வைக் காட்டி நிற்கிறது இந்தப் படைப்பு.

பதின்னான்கு நிமிடங்களும் பரபரப்பூட்டும் வகையிலான காட்சிகளை வைத்திருப்பது உண்மையில் இப் படைப்பின் வெற்றி எனலாம். மீடியா செல்வா முகுந்தனின் தயாரிப்பில் ஆ.கு ஜோன்சனின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப் படைப்பில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்து இயங்கியிருக்கின்றது.

பாடலாசிரியரும்,  தயாரிப்பாளருமாகிய செல்வா முகுந்தனின் படைப்புக்கள் எப்போதும் ஒரு வித்தியாசமான பாணியில் அமைந்து விடுவதுண்டு. அதற்கு சான்று பகரும் முகமாக இப் படைப்பும் பல்வேறு உணர்வியலைத் தாங்கி வெளியாகி இருக்கின்றது.

ஈழத்துத் திரைத் துறையில் பல நல்ல தரமான பாடல்களை எழுதி இருக்கின்ற படலாசிரியர் ஆ.கு.ஜோன்சன் இப் படைப்பில் தன்னை இயக்குனராகவும், நல்ல நடிகராகவும் புது அவதாரம் மூலம் நிரூபித்திருக்கிறார். பாத்திரங்களின் தோற்றத்திற்கேற்ப தன்னை அர்ப்பணித்திருக்கின்ற அவருடைய உழைப்பு நிச்சயம் பாராட்டத்தக்க ஒன்றே.

இப் பாடலின் மற்றொரு மிகப்பெரிய பலம் பத்மயன் சிவாவின் பாடல் இசையும் பின்னணி இசையுமே. பாடகர் ராம் ரமணனை வித்தியாசமான பல கோணங்களின் வாயிலாக அண்மிய நாட்களாக பயன்படுத்தி நல்ல அறுவடைகளையும் தந்துகொண்டிருக்கும் இசையமைப்பாளர் பத்மயன் ஒரு கைதேர்ந்த கலைஞனாகத் தன்னை நிரூபித்திருக்கின்றார்.

பாடகர் ரமணனும் பாடலை அழகாகப் பாடியிருக்கின்றார். செல்வா முகுந்தனின் வரிகள் ஒவ்வொன்றும் உணர்வைக் கொப்பளித்து நிற்கின்றமை பாடலை உணர்வு பூர்வமாக்கி இருக்கின்றது. திரையில் நடிகராக ஜோன்சன், மேரி உள்ளிட்ட அனைவருமே தத்தம் பாத்திரங்களின் கனதியை உணர்ந்து நடித்துள்ளனர்.

காட்சியாக்கப்பட்ட இடங்களும், ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் வைக்கப்பட்ட டுவிஸ்டுகளும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஊட்டி நிற்கின்றது. தவிப்பு, ஏக்கம், அன்பு, பரிவு, கோபம் என இப்படியாய் பல உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது தாயுமானவன் பாடல். படத்தொகுப்பை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார் வின்சன் குரு.

தாயுமானவன், படைப்பை பாடல் என்பதா குறும்படம் என்பதா என்று சொல்ல முடியாத அளவிற்கு படைப்பு பார்ப்போரின் மனநிலையில் ஆரோக்கியமான கருத்தியலை உண்டாக்கி இருக்கின்றது.

எல்லோருடைய பெயரையும் குறிப்பிட்டு கூற முடியாத அளவிற்கு பெரும் நட்சத்திர பட்டாளமொன்றே இந்தப் படைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்திருக்கிறது. உண்மையில் பல்வேறு கடினங்கள், உடல் உழைப்புக்கள், என பலரின் கூட்டுழைப்பின் ஓர் அம்சமாக பார்ப்போர் அனைவரின் மனநிலையோடு ஒன்றித்து நிற்கின்றது தாயுமானவன்.


Add new comment

Or log in with...