பல்பரிமாணக் கலைஞன் வல்வை சுமன்

வல்வெட்டித்துறை மண்ணைச் சேர்ந்தவர் வல்வை சுமன். கலைத்துறை சார் பல்வேறுபட்ட செயற்பாடுகளினூடாக ஈழத்துக் கலைப் பரப்பில் நன்கு அறியப்பட்ட ஒருவர் இவராவார். இன்றைய சமகாலத்தில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக அநேகரிடம் நன்கு பரீட்சயமான இவரது சமகால கலைசார் படைப்புக்கள் பலரின் பெருவிருப்பை பெற்று வருகிறது.

சமகால படைப்பியல் முயற்சியை விலாவாரியாகப் பார்ப்பதற்கு முன்னர் இவரின் ஆரம்ப கால கலைத்துறைசார் விடயங்களை பார்க்க வேண்டிய கடப்பாடும் இருகின்றது.

பாடசாலை காலத்திலிருந்தே எழுத்துத் துறையில் அதுவும் கவிதைத் துறையில் நாட்டமுள்ள ஒருவராக இவர் விளங்கினார். 2004சுனாமி பேரனர்த்த காலத்திலிருந்தே கவிதைகளை எழுதத் தொடங்கிய இவர் வல்வை.மூ.ஆ.சுமன் என்ற பெயரினூடாக அன்றைய நாட்களில் பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் வாயிலாக எழுத்துத் துறையில் நன்கறியப்பட்ட ஒருவராகக் காணப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக 2008ஆம் ஆண்டளவில் இவர் கல்வி கற்ற வல்வை சிதம்பராக் கல்லூரியில் தனது கன்னித் தொகுப்பாக  'வாழ்வு தனைத் தேடி' 'என்ற கவிதைத் தொகுப்பை வெளியீடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து 2009இல் 'மரணித்த மனிதம்' என்ற தொகுதியையும், 2014ஆம் ஆண்டளவில் 'முகாரி பாடும் முகங்கள்' என்ற கவிதைத் தொகுப்புமாக ஈழத்துக் கவிதைத் துறைக்கு தனது மூன்று கவிதை நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறு வயது முதலேயே நாடகத்துறையில் பெரும் ஈடுபாடு கொன்டிருந்த இவரின் நடிப்புத் திறனுக்கு சான்று பகரும் முகமாக 2005ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றிய இவர் அந்நாளில் பல பத்திரிகைகளிலும் மக்கள் சார் விடயங்களையும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் முகமாகவும் பல கள ஆய்வுகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்பவற்றையும் மேற்கொண்டிருந்தார்.

மிகச்சிறந்ததொரு நடிகராக வலம் வந்த சுமன் ஈழத்துக் குறும்படத் துறையிலும் தனது வகிபாகத்தைக் கொண்டுள்ளார்.

இதன் வாயிலாக பிச்சை, மனம், வெட்டியா ஒரு செல்பி போன்ற குறும்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

வடமோடிக் கூத்து நாடகங்கள் பலவற்றிலும் பங்கேற்றிருக்கின்ற இவர் வல்வெட்டித்துறை கலை, கலாசார மன்றம் என்னும் இளையோரின் உருவாக்கம் வாயிலாக வருடா வருடம் பல நிகழ்வுகளையும் ஆற்றி வந்துள்ளார்.

பாடலாசிரியராகவும் பல பாடல்களை எழுதியுள்ள இவர் 2015இல் புலம்பெயர் நாட்டிற்குச் சென்ற பின்னர் தனது கலைத்துவப் பயணத்தின் அடுத்த தளம் வாயிலாக பயணிக்கத் தொடங்கினார்.

டப்மாஷ் என்ற தொலைபேசி அப்ஸ் மூலமாக ஆரம்பத்தில் தனியாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தத் தொடங்கிய அவருக்கு அந்த முயற்சி நல்வரவேற்பைப் பெற்றுத்தர அதனைத் தொடர்ந்து தனியாக பல வேடங்களைத் தாங்கி ஒரே காலத்தில் சமகால வாழ்வியல் சார்ந்த விடயங்களை நகைச்சுவை ததும்பச் சிறுக் காணொளிக் கதைகளாக உருவாக்கி தனது தளத்தில் வெளியீடு செய்தார்.

அந்த முயற்சி இவரை இன்னுமொரு பார்வைக்கூடாக அடையாளப்படுத்தத் தொடங்கியது. தொடர்ந்து அந்தப் பாதையிலேயே தன்னை முழுமையாக ஈடுபடத்த தொடக்கி இன்று அநேகரால் விரும்பப்படுகின்ற 'இது அது தான்' என்ற நகைச்சுவைத் தொடர் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட தொடர்களை நடித்து வெளியிட்டிருக்கின்றார்.

இதனுடாக ஐரோப்பிய மண் உள்ளிட்ட அனைத்திடங்களிலும் நன்கறியப்பட்டவராக சுமன் வலம் வருகிறார். சமூக ஊடகங்கள் என்ற தளத்தில் இன்று தன்னை சுயாதீனக் கலைஞராக, நண்பர்களுடன் இணைந்து படைப்புக்களில் பணியாற்றுகின்ற அநேகரும் இரசிக்கின்ற ஒருவராக இவர் வலம் வருகின்றமை எலோரும் அறிந்த ஒன்றே.

எழுத்து, நாடகம், ஊடகம், இயக்கம், திரைக்கதை எழுத்து, தயாரிப்பு, பாடலாக்கம் என அத்தனை தளங்களினூடாக வெளித்தெரியும் வல்வை மு.சுமன் எதிர்காலத்தில் இன்னும் பல தளங்களினூடாகவும் சாதிப்பார் என எண்ணத் தோன்றுகிறது.


Add new comment

Or log in with...