ஈழத்து கவிதைப் பரப்பில் பாலமுனை பாறூக்கின் ஆரோக்கியமான ஐம்பது வருட இலக்கியத் தடம் | தினகரன்

ஈழத்து கவிதைப் பரப்பில் பாலமுனை பாறூக்கின் ஆரோக்கியமான ஐம்பது வருட இலக்கியத் தடம்

- பேராசிரியர்  ரமீஸ் அப்துல்லாவின் பார்வையில் கவிஞர் பாலமுனை பாறூக்

ஈழத்து இலக்கியப் பரப்பில் 50வருடங்களாக ஆரோக்கியமாக பயணித்து வரும் கவிஞர் பாலமுனை பாறூக்.

நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. அப்போதிருந்தே நான் அறிந்த கவிஞர்களில் ஒருவர் பாலமுனை பாறூக்.

“பாலமுனை பாறூக்: 1968ஆம் ஆண்டு கவிதைச் சோலைக்குள் பிரவேசித்து எழுபதுகளில் பிரகாசிக்கத் தொடங்கினார். மனிதாபிமானப் படைப்பாளியான இவர் காத்திரமான கவிதைகளை எழுதி வருகிறார். கவியரங்குகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.

நாசூக்காக மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் பாட வேண்டும் என்ற கருத்தை இந்தக் கவிதையில் முன்வைக்க வருகிறார் பாறூக்.

‘என்னை நீங்கள் எழுத விடாது
எனது கைகளை கட்டி விடுங்கள்
எரிகிற பிரச்சினை எதனைப் பற்றியும்
எழுத என்னை அனுமதியாதீர்
எனது சமூகம் எனது இனம்
எனது மக்களின் எழுச்சி என்று
ஏதும் எழுத அனுமதி யாதீர்
என்னை நீங்கள் தாலாட்டுங்கள்
எல்லாம் மறந்து உறங்கிப் போகிறேன்!.....
தற்போதுள்ள எல்லைக் கோட்டை
தாண்ட விடாது பார்த்துக் கொள்வீர்?
நீங்கள்
சு...தந்திர வாதிகளன்றோ?

இந்தக் கவிதைய பார்க்கிற போது அந்தக் காலத்தில் ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள் ஒருவரான மஹாகவி முன்வைத்த கருத்துக்களே ஞாபகத்துக்கு வந்தது.

“இன்னவைதாம் கவி எழுத
ஏற்றபொருள் என்று பிறர்
சொன்னவற்றை, நீர் திருப்பிச்
சொல்லாதீர், சோலை, கடல்
மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள்,மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்”
என்றும்

“இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத்திழுப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள்”
என்றும்,

மஹாகவி சமகால மனிதனைப் பாட கோஷம் எழுப்பினார்.

அந்தப் பாணியிலே மக்களுக்காக கவிதை பாட வந்தவர்களில் தென்கிழக்குப் பிரதேசத்தில் முக்கியமானவர்களில் ஒருவராக பாலமுனை பாறூக் திகழ்ந்தார்.

இவ்வாறு பாலமுனை பாறூக்கின் இலக்கியப் பயணம் நீடித்தது. அந்தக் காலத்தில் ஊர்களில் கவியரங்கம் நடத்துவது ஒரு பெஷனாக இருந்தது. இலக்கியக்காரர்களின் சுவாரஷ்யம் மிக்க பொழுதுபோக்காக கவியரங்கம் இருந்தது. பெரும்பாலும் பாறூக் கவியரங்குக் கவிதைகளில் தனது இருப்பை அதிகம் தக்கவைத்துக் கொண்டார். இன்றும் கவியரங்கங்கள் பெரும்பாலும் குறைந்து விட்டாலும் இலக்கிய மேடைகளில் பாப்புனைந்து கவியரங்கப் பாணியில் மகிழ்விக்கிற பெஷன் பாறூக்கிடம் இல்லாமலில்லை.

இன்று இளைய தலைமுறையினராலும் அறியப்பட்ட பிரபலமான கவிஞனாக பாலமுனை பாறூக்  மாறியிருக்கிறார். அந்த இலக்கிய நீராடலுக்கு வயது ஐம்பது.

அந்தக் காலத்துக் கவிஞனுக்கு சமூகத்தில் அதிக மதிப்பிருந்தது. கவிஞன் சமூகத்தில் விழிப்புணர்வினை உருவாக்குகின்ற கருவியாக இருந்தான். அக்காலத்துக் கவிஞன் கொள்கைகளோடு எழுதினான். அவனுக்குள் முற்போக்குணர்வு இருந்தது. அந்த முற்போக்குணர்வின் அடையாளங்களாகவே பாறூக்கின் ஆரம்பகாலக் கவிதைகள் இருந்தன.

அந்தக் கவிதைகள் மூலமாக அந்தக் காலத்து எழுத்தாளர்களால் பாலமுனை பாறூக் அதிகம் பேசப்பட்டார். பாறூக்கின் இலக்கியப் பயணம் கவிதைகளாலே சூழ்ந்திருந்தது. அதன்வழியாக ‘பதம்’;(1987), ‘சந்தனப் பொய்கை’(2009) ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளிவந்தன. பிற்காலத்தில் குறுங்காவியம் என்றும் குறும்பாக்கள் என்றும் வலைப்பூக்கள் என்றும் அவர் எழுதத் தொடங்கினார். அவருடைய இறுதியாக வந்த குறுங்காவியம் ‘நங்கணப் பறவைகள்’. கவிதை மொழியால் அவர் அதிகம் சாதித்திருக்கிறார்.

இன்று இலக்கிய உலகம் எல்லாவற்றையும் போல போட்டியும் பொறாமையும் மிக்கதாக மாறிவிட்டது. பிரபலத்திற்காக ஆலாய்ப்பறக்கிற உலகமாய் மாறிவிட்டது. ஒரு தடவையிலேயே மகா கவிஞர்கள் பலர் உருவாகி விட்டார்கள்.

ஒரு பிரதியின் மூலமே தங்களை உன்னதமான கவிஞர்கள் என தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக்  கொள்கிறார்கள். பிரமுகர்கள் கவிதை எழுதுகிறார்கள் என்பதற்காக அவற்றின் தரம் பாராது ஆட்களின் தகுதிக்காக அவற்றினை போற்றி வருகின்ற காலமாகி விட்டது. இந்தச் சகதிக்குள் பாலமுனை பாறூக்கின் ஐம்பது ஆண்டு கால இலக்கியப் பயணம் ஆரோக்கியமானது என்று சொல்வதில் தவறிருக்க மாட்டாது என்று எண்ணுகிறேன்.

மஹாகவியிடம் மக்களுக்காகக் கவி பாட வேண்டும் என்று கற்றுக் கொண்ட பாறூக் மஹாகவி, நீலாவணன் முதலானவர்கள் பாடிய குறுங்காவியத்தை கைப்பிடித்துக் கொண்டார். இவ்வகையில் மூன்று குறுங்காவியங்களை அவர் எழுதியுள்ளார். சுனாமிப் பேரவலத்தின் பின்னணியில் எழுந்த ‘கொந்தளிப்பு’ தென்கிழக்குப் பிரதேச மக்களின் சமூக அரசியல் பண்பாட்டு உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இது 2010ஆம் ஆண்டு வெளிவந்தது. அதே போல 2011இல் அதிகப் பிரபல்யம் பெற்ற ‘தோட்டுப்பாய மூத்தம்மா’ என்ற குறுங்காவியத்தை அவர் எழுதினார். இக்குறுங்காவியம் அரச சாகித்ய விருதினையும் பெற்றுக் கொண்டது. அதே போன்று 2012இல் ‘எஞ்சியிருந்த பிரார்த்தனை’ என்ற குறுங்காவியத்தை தருகிறார். இது இப்பிரதேச மக்களின் ஒன்றித்த வாழ்க்கையை - அரசியலை கோடிட்டுக் காட்டுகிறது. இப்படி மூன்று காவியங்களைத் தந்த அவர் நவீன காவியங்களைப் பாடுவதற்கு நமக்குள் தகுதியானவர் என்பதை பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இதற்கப்பால் 2013ஆம் ஆண்டில் ‘பாலமுனை பாறூக் குறும்பாக்கள்’ என்ற தொகுதி வெளிவந்தது. இதுவும் மஹாகவியின் வழியாக வந்ததென்றே சொல்ல வேண்டும். சமூகத்தின் அவலங்களை கேலியும் கிண்டலுமாக மஹாகவி பாடியது போல பாறூக்கும் நயமாகப் பாடியுள்ளார். இப்பாடல்களின் ஊடாக பல படிப்பினைகளையும் அவர் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக பாலமுனை பாறூக்கின் ‘மீளப் பறக்கும் நங்கணங்கள்’ என்ற காவியம் 2020இல் வெளிவந்தது. இது நவீன காவிய வரிசையில் பொருள் ரீதியாக வேறுபட்டதாகும். இந்தப் புதிய முயற்சி பலரைக் கவர்ந்தது மாத்திரமன்றி முதியோர் பலருக்கு ஆறுதலாகவும் அமைந்தது. முதிய தம்பதிகளை எப்படிப் பிள்ளைகள் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு வழிவகையாகவும் இருந்தது. இந்த முதியவர்கள் பிரச்சினை தமிழர் சமூகத்திலும் இலக்கியங்களிலும் அதிகம் பேசப்பட்டது.

இலக்கியத்தின் அரசி எனப் போற்றப்படும் கவிதை மொழியை பல வழிகளில் இவ்வளவு நீண்ட காலத்திற்கு பயன்படுத்திய வகையில் பாறூக்கிற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அவர் கவிதைகளில் சொற்கள் தடம் மாறாது ஆற்றொழுக்காகச் செல்வது போல் அவரது இலக்கியப் பயணமும் ஆரோக்கியமும் காத்திரமும் நிறைந்ததாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. ஐம்பது வருட கால ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பரப்பில் பாலமுனை பாறூக் என்ற கவிஞனின் முன்னுதாரணமும் கடந்து வந்த தடங்களும்; புறந்தள்ளக் கூடியதல்ல.

பேராசிரியர்
கலாநிதி
றமீஸ் அப்துல்லாஹ்


Add new comment

Or log in with...