நடைப்பயிற்சி; மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் | தினகரன்

நடைப்பயிற்சி; மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்

எடை குறைப்பு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் வரை பல நோய்களுக்கு நடைப்பயிற்சியே டொக்டர்களின் ஒரே வார்த்தையாகும். இவ்வாறு பல்வேறு நோய்களில் இருந்து விடுவிக்கும் நடைப்பயிற்சியால், மேலும் ஒரு பலன் குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், நடைப்பயிற்சி செய்வதால், மூளை இயக்கம் சீரடைவதாக தெரியவந்துள்ளது.

மூளை பாதிப்புற்றவர்களைக் கொண்டு வாரத்துக்கு மூன்று மணி நேரம், ஆறு மாதத்துக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில், அவர்களின் மூளை இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வு சிறிய அளவிலானதுதான். விரைவில் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால், ஆயுள் கூடும் என ஆய்வு கூறுகிறது.

வாரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்தால், அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தாக்கும் அபாயத்தை 35சதவீதம் குறைக்கிறது. சர்க்கரை நோய் வரும் அபாயத்தை 50சதவீதம் குறைக்கிறது. சிலவகை புற்றுநோய்கள் வரும் அபாயத்தை 20முதல் 50சதவீதம் வரை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கும் வாக்கிங் உதவுகிறது.

கடற்கரை, பூங்கா, திறந்தவெளி, மொட்டைமாடி என எங்கு வாக்கிங் சென்றாலும் சுத்தமான காற்று அதிகம் கிடைப்பதால் நுரையீரல் சீராக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் தவிர்க்கலாம். தவறாமல் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு நினைவுத்திறன் கூடும்.

மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாகும். இளம்வயதில் தவறாமல் நடைப்பயிற்சி செல்கிறவர்களுக்கு முதுமையில் உடல் உறுப்புகள் இயங்காமல் அவதிப்படும் பிரச்சினை வருவதில்லை. அதனால் நடைப்பயிற்சி செய்வது மிகச் சிறந்தது.


Add new comment

Or log in with...