அசாத் சாலி சர்ச்சைக்குரிய கருத்து; விசாரணைக்கு CID யின் ஐவர் குழு

அசாத் சாலி சர்ச்சைக்குரிய கருத்து; விசாரணைக்கு CID யின் ஐவர் குழு-A Five Member Police CID Team, Lead by an ASP Appointed to Investigate Into the Controversial Statements by Azath Salley

 "முஸ்லிம் சட்டத்தை யார் மாற்றினாலும் நாம் மாற்றப் போவதில்லை. எமது சட்டம் எங்களுக்கு, உங்களது சட்டம் உங்களுக்கு. அதிலுள்ள சரி, பிழை பற்றி பார்க்க வேண்டியவர்கள் நாம். அரசாங்கத்தின் சட்டம் அரசாங்கத்திற்கு. புத்தகத்தில் மாற்றியுள்ளார்கள் என்பதற்காக எமது சட்டத்தை மாற்ற முடியுமா? முடியாது." - அசாத் சாலி

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அசாத் சாலி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விரைவாக விசாரணை செய்ய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

 

 

நாட்டின் சட்டத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான 5 CID அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சிஐடி மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஆசாத் சாலியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறப்பட்ட விடயங்கள் மற்றும் அதன் மூலம் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதா என்பதையும் குறித்த குழு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 09ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், "முஸ்லிம் சட்டத்தை யார் மாற்றினாலும் நாம் மாற்றப் போவதில்லை. எமது சட்டம் எங்களுக்கு, உங்களது சட்டம் உங்களுக்கு. அதிலுள்ள சரி, பிழை பற்றி பார்க்க வேண்டியவர்கள் நாம். அரசாங்கத்தின் சட்டம் அரசாங்கத்திற்கு. புத்தகத்தில் மாற்றியுள்ளார்கள் என்பதற்காக எமது சட்டத்தை மாற்ற முடியுமா முடியாது." எனும் கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் CID யில் முன்னிலையாக தயாராக உள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (13) கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு வந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தான், இந்நாட்டில் கண்டிச் சட்டம் சிங்களவர்களுக்கும், தேசவளமை சட்டம் தமிழர்களுக்கும், ஷரீஆ சட்டம் முஸ்லிம்களுக்கும் உள்ளதாக தெளிவாக தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

குர்ஆனை படியுங்கள், குர்ஆனிலுள்ளவாறு நடந்து கொள்ளுங்கள், நபியின் நடைமுறையை பின்றபற்றுங்கள் என, முஸ்லிம்களுக்கு கூறப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமொன்றை மதிக்க வேண்டாம் என எதிலும் எமக்கு கூறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...