சவூதியின் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல்: எண்ணெய் விலை உயர்வு | தினகரன்

சவூதியின் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல்: எண்ணெய் விலை உயர்வு

சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகள், சேமிப்புக் கிடங்குகள் மீதான தாக்குதலையடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 2 வீதம் உயர்ந்து 70 டொலர் 82 சென்ட்களாக உள்ளது.

சவூதி அரேபியாவில் அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகள், சேமிப்புக் கிடங்குகள் மீது யெமனைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றான ராஸ் டனுராவில் இருக்கும் எண்ணெய் களஞ்சிய தொட்டி ஒன்றின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அன்று மாலையில் சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் இருக்கும் தஹ்ரானில் ஏவுகணை ஒன்று விழுந்துள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலால் உயிர் பொருள் சேதங்கள் ஏற்படவில்லை என்று சவூதி எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலால் எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 2 புள்ளி ஒரு வீதம் உயர்ந்து 70 டொலர் 82 சென்ட்களாக உள்ளது. இதன்படி மசகு எண்ணெய் விலை 2019 மே மாதத்தில் இருந்த அளவை 20 மாதங்களுக்குப் பின் மீண்டும் எட்டியுள்ளது. எனினும் எண்ணெய் உற்பத்தியை மட்டுப்படுத்த சவூதி அரேபியா மற்றும் ஒபெக் அமைப்பு கடந்த வாரம் முடிவெடுத்திருக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஏற்கனவே வலுவான நிலையில் உள்ளது.

 


Add new comment

Or log in with...