200 Kg ஹெரோயினுடன் இலங்கை படகுகள் மூன்று தமிழகத்தில் மீட்பு

இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் 12 பேர் கைது

200 கிலோ ஹெரோயின் மற்றும் 60 கிலோ ஹசீஸ் போதைப் பொருளுடன் இலங்கை படகுகள் மூன்று இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் படகில் இருந்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தெற்கு கரையோரப்  பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரையோர பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகத்துக்கிடமான படகுகள் மூன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து அதனை சோதனை செய்த பாதுகாப்பு படையினர் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ ஹெரோயின் மற்றும் 60 கிலோ ஹசீஸ் ரக போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய கரையோர பாதுகாப்பு படையின் வருஷா எனப்படும் கப்பலே இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளது. இப் படகில் 19 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சொந்தமான ஆகர்ஷாதுவ, சதுராணி 3 மற்றும் சதுராணி 8 ஆகிய படகுகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

லக்க்ஷா தீவுக்கு 400 கடல் மையில் தொலைவில் பாகிஸ்தானிய கப்பல் ஒன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதாக ஆகர்ஷாதுவ படகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களும் படகும் இந்தியாவின் திருவாந்திரபுரம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் கரையோர பாதுகாப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நமது தமிழக நிருபர்


Add new comment

Or log in with...