மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பம் | தினகரன்

மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பம்

மேல் மாகாணம் தொடர்பில் ஓரிரு தினங்களில் அறிவிப்பு

மேல் மாகாணம் தவிர்ந்த நாடளாவிய அனைத்து பாடசாலைகளும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டபடி எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பதற்கு அனைத்து முன்னோடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இரண்டொரு தினங்களில் இது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பதற்கான இறுதித் தீர்மானத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உள்ளிட்ட சுகாதாரத் துறை சார்ந்தவர்களே மேற்கொள்வார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள கல்வியமைச்சர்; கல்வியமைச்சு ஏற்கனவே திட்டமிட்டபடி மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பகுதிபாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்கப்படும். மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கு தயாராக உள்ள நிலையில் கல்வி அமைச்சானது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அந்த வகையில் அவரது தீர்மானத்தை பெற்றுக்கொண்டு எதிர்வரும் ஓரிரு நாட்களில் அதற்கான அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்குமானால் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று மேல்மாகாண பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

 லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...