கமல் வருந்தி அழைத்தும் கட்சிகள் வருவதாக இல்லை | தினகரன்

கமல் வருந்தி அழைத்தும் கட்சிகள் வருவதாக இல்லை

காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் அந்த கட்சி கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணிக்கு வரவில்லை. இதேபோல் 'தம்பி திருமா' என அழைத்தும் அவரும் கமலின் கூட்டணிக்கு வரவில்லை. ஆனாலும் தளராத கமல்ஹாசன், பல்வேறு சிறிய கட்சிகளை தங்கள் பக்கம் கூட்டணிக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சரத்குமார், பச்சமுத்து ஆகியோரை தங்கள் கூட்டணியில் இணைத்த கமல்ஹாசன், தற்போதைய நிலையில் கருணாஸின் புலிப்படை மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 6ம் திகதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கு இன்னும் 28 நாள்கள் மட்டுமே காலஅவகாசம் உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரம் மட்டுமே காலஅவகாசம் உள்ளது. எதிர்வரும் 15ம் திகதி வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள மூன்று அணிகளான அ.தி.மு.க, தி.மு.க, மக்கள் நீதி மய்யம் ஆகியவை தீவிரம் காட்டுகின்றன.

தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இந்த முறை வழக்கத்தை விட குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படுகின்றன. இதனால் வி.சி.க, ம.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வருத்தத்தை வெளிப்படுத்தின. எனினும் யாரும் கூட்டணியை விட்டு விலகி செல்லவில்லை. பா.ஜ.கவையும் அ.தி.மு.கவையும் தோற்கடிக்க தி.மு.கவுடன் இருக்க வேண்டும் என்பதில் தங்கள் உறுதியை வெளிப்படுத்தி உள்ளனர். தொகுதி உடன்பாட்டை விட கூட்டணி முக்கியம் என விரும்புகின்றன.

முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், 'தம்பி திருமா' என்று பாசத்தோடு அழைத்தார். ஆனால் அவர் கூட்டணிக்கு வர முடியாது என்பதை நாசுக்காக மறுத்து விட்டார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை நேரடியாகவே கமல் கூட்டணிக்கு நேற்றுமுன்தினம் அழைத்தார். ஆனால் அந்த அழைப்பை காங்கிரஸ் ஏற்கவில்லை.

காங்கிரஸ் வராத நிலையில், அசராத கமல்ஹாசன், மற்ற சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போதைய நிலையில் கமலின் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன. இது தவிர கருணாஸின் புலிப்படை மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தவிர டி..டிவி தினகரனின் அ.ம.மு.க கமல் கூட்டணியில் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. கமல்ஹாசன் அணி இந்த முறை எத்தனை சதவீதம் வாக்குகள் வாங்க போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. வாக்குகளை பிரிப்பாரா அல்லது ஆட்சியை பிடிப்பாரா என்பது மே 2ம் திகதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்து விடும்.


Add new comment

Or log in with...